Header Ads Widget

`பெரியார் சிலை டு அறநிலையத்துறை'- அரசியல் களத்தில் அனல் கிளப்பும் அண்ணாமலை; எதிர்ப்பும் பின்னணியும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன், `ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைப்போம்' எனப் பேசியதால் கைதுசெய்யப்படும் அளவுக்குப் பிரச்னை முற்றியது. 2018-ம் ஆண்டு திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதையடுத்து, அங்கு சிலரால் லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டு, `தமிழகத்திலும் ஒருநாள் பெரியார் சிலைகள் அகற்றப்படும்’ என ஹெச்.ராஜா சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதை ஒட்டியும், தமிழகத்தில் பரவலாகப் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், தற்போது அண்ணாமலையின் பேச்சால் பெரியார் சிலைகள் குறித்த விவாதங்கள் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கின்றன. “தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன், கோயில்களுக்கு முன்பு இருக்கும் பெரியார் சிலைகளை அகற்றுவோம். இந்து சமய அறநிலையத்துறையை ஒழித்துக்கட்டுவோம்” என்று ஸ்ரீரங்கத்தில் நடந்த பாதயாத்திரையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

ஸ்ரீரங்கத்தில் பேசும் அண்ணாமலை

பா.ஜ.க, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து அண்ணாமலையின் பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பும், தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பும் கிளம்பியது. அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் கொடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒன்று சேரந்திருப்பதுதான் தமிழ்நாடு. இதில் பெரியார் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இந்த அரசு செயல்பட்டுவருகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர... தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் பா.ஜ.க-வால் ஆட்சிக்கு வர முடியாது. ஆட்சிக்கு வந்தால்தானே முதல் கையெழுத்து போடுவார்கள்?” என்று கடுமையாக விமர்சித்தார்.

ஸ்ரீரங்கம் சிலை முன்பு இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு 1969-ம் ஆண்டிலேயே நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் 2006-ம் ஆண்டில்தான் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் வைக்கப்பட்ட சிலை திறக்கப்படும் முன்பே சிலரால் உடைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். டிசம்பர் 7-ம் தேதி உடைக்கப்பட்ட சிலை, டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்தே இந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், ``கோயில் தெருவில் இருப்பதாலேயே, அந்தச் சிலையை எடுக்க வேண்டுமென்பது அபத்தமாக இருக்கிறது. எத்தனை லட்சம் பக்தர்கள் இதுவரை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று வந்திருப்பார்கள்... அவர்கள் யாரும் தங்கள் மனம் புண்பட்டதாக இதுவரை சொன்னதே இல்லை. பெரியார் எதற்காகப் போராடினார் என்பது அந்த மக்களுக்குத் தெரியும். அதனால்தான் யாரும் எதிர்ப்பதில்லை. பா.ஜ.க அரசியலுக்காக எதிர்க்கிறது” என்று திராவிடர் கழகத்தினர் கூறுகின்றனர்.

அண்ணாமலை, ஸ்ரீரங்கம் பெரியார் சிலை

இது தொடர்பாக கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விளக்கமளித்த அண்ணாமலை, “பெரியார் சிலைகளை அகற்றுவது என்றால், உடைப்பது என அர்த்தமில்லை. அவருடைய சிலையை வேறு இடத்தில் மாற்றிவைப்போம் என்றுதான் சொன்னோம். பெரியாரை நாங்கள் எங்கேயும் அவமதிக்கவில்லை. அவருக்கு என்ன கெளரவம் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்போம். எத்தனையோ விஷயங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று கூறினார். ஆனால், “கோயில்களுக்கு முன்பாக கடவுள் மறுப்பு வாசகங்கள் இருக்கக் கூடாது. தி.மு.க-வை விமர்சித்து பெரியார் கூறியதை, தி.மு.க அலுவலகம் முன்பு வைப்பார்களா... கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து பெரியார் கூறியதை, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு வைப்பார்களா... காங்கிரஸை ஒழிக்க வேண்டுமென்று பெரியார் கூறியதை, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு வைப்பார்களா... அதுபோலத்தான் கோயிலுக்கு வெளியே வேண்டாம். அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டுமென்பதும் எங்கள் கொள்கை நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தவுடன் அதைச் செய்வோம்” என்றார்.

அறநிலையத்துறை குறித்து பிரதமர் மோடியும் சமீபத்தில் விமர்சனங்களை வைத்திருந்தார். “மற்ற மதங்களின் வழிபாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லாதபோது, இந்துக் கோயில்களின் வழிபாட்டு விவகாரங்களில் மட்டும் அரசு மூக்கை நுழைப்பது ஏன்... இந்துக் கோயில்களை இந்துக்களிடம் விட்டுவிடுங்கள். அறநிலையத்துறை எண்ணற்ற ஊழல்களில் ஈடுபடுகிறது. ஆலயப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்றால், அறநிலையத்துறையை அகற்ற வேண்டும்” என்பதுதான் பா.ஜ.க-வினர் கொடுக்கும் விளக்கமாக இருக்கிறது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, “5,436 கோடி ரூபாய் பெருமானமுள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 1,131 கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது. 8,000-க்கும் அதிகமான கோயில்களில் திருப்பணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் ஒரு லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் 2,000 கிராமக் கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மகுடமாக கருவறைத் தீண்டாமையை ஒழித்து, 28 கோயில்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். எட்டு பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதெல்லாம் சாதனை இல்லையா?” எனக் கேட்கின்றனர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்.

இந்து சமய அறநிலையத்துறை

பெரியார் சிலையை வைத்தும், அறநிலையத்துறையை வைத்தும் நடக்கிற விவாதங்கள் குறித்து அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டோம். “ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலை பக்தர்கள் யாருக்கும் இடையூறாக இல்லை. `கடவுள் இல்லை’ என்ற வாசகத்தைப் பார்த்தவுடன் பக்தர்கள் மாறிவிடுவார்கள் என்பது, எதையாவது பேச வேண்டுமெனப் பேசுகிற பேச்சாகத்தான் தெரிகிறது. அந்த வாசகம் இந்து அமைப்புகளுக்குத்தான் பிரச்னையாக இருக்கிறது. அவர்களின் அரசியலுக்காக அதை அவ்வப்போது கையிலெடுக்கிறார்கள். அந்த அரசியல் தமிழ்நாட்டில் கைகொடுக்கவில்லை என்று தெரிந்தும், மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். ஆனால் ஹெச்.ராஜாவைப்போல அண்ணாமலையோ, எல்.முருகனோ, தமிழிசையோ `ஈ.வெ.ராமசாமி' என்று சொல்வதில்லை, `பெரியார்’ என்றே சொல்கிறார்கள். அதிலிருந்தே தமிழ்நாட்டின் கள யதார்த்தம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது எனத் தெரிகிறது. ஆனால், கூட்டத்தைப் பார்த்தவுடன் அண்ணாமலை ஆர்வக்கோளாறில் எதையாவது பேசிவிடுகிறார். அதன் பிறகு சொன்ன கருத்தில் பின்வாங்கியிருக்கிறார்.

ஜெகதீஸ்வரன்

அதேபோல அறநிலையத்துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையா என்றால்... இருக்கலாம். ஆனால், அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்று ஏன் பா.ஜ.க சொல்கிறது... அறநிலையத்துறை இல்லை என்றால் கோயில்களை யார் கைகளில் கொடுக்கப்போகிறார்கள்... குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்டுப்பாட்டுக்குத்தானே கோயில்கள் போகும்... பா.ஜ.க சொல்வதுபோல அறநிலையத்துறை பணத்தை எடுத்து வேறு துறைகளுக்குக் கொடுக்க முடியாது. ஆனால், அறநிலையத்துறை அந்தப் பணத்தை வைத்து கோயில்கள், பள்ளிக்கூடங்கள் கட்டலாம். அவை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எனவே தவறான பிரசாரத்தைத் தொடர்ந்து செய்கிறார்கள்” என்றார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்