சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் கதிர். இவர்கள் குடும்பத்துடன் தேனாம்பேட்டையிலுள்ள தியேட்டருக்கு `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது இவர்களின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர், அதிக சத்தத்துடன் விசில் அடித்தனர். அதனால், ரமேஷ் தரப்புக்கும் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கும்பல், ரமேஷ், அவர் மகன் கதிர் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியது. தியேட்டருக்குள் இந்தச் சம்பவம் நடந்ததால், அங்கிருக்கும் ஊழியர்கள் இரு தரப்பையும் சமரசப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்தில் கதிருக்கும், அவரின் அப்பா ரமேஷுக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக ரமேஷ் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், விசாரணை நடத்திவருகிறார். காயமடைந்த கதிர், ரமேஷ் ஆகியோர் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விசாரணையில் காயமடைந்த ரமேஷ், தமிழக மூத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் என்பதும், கதிர் அமைச்சரின் பேரன் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடத்திவருகிறார்கள்.
from Latest news

0 கருத்துகள்