நாட்டில் மிகவும் பிரபலமான ஏர்லைன்ஸ் நிறுவனமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2020-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, தன் சேவையை நிறுத்திக்கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நிறுவனத்தை நடத்தப் போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தால், இப்போது அந்த நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வாங்கிய நிதியைக் கையாடல் செய்ததாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவரின் 538 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியிருக்கிறது. அதோடு அவர்மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.
அதில், `நரேஷ் கோயல் ஏர்வேஸ் நிறுவனத்துக்காகப் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியபோது, அவரின் மனைவி அனிதா கோயலும் ஏர்வேஸ் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். அதோடு வெளிநாடுகளில் நரேஷ் கோயல் உருவாக்கிய டிரஸ்ட்டுகளிலும் அனிதா கோயல் டிரஸ்ட்டியாக இருந்தார். வங்கிகளில் கடனாகப் பெற்ற பணத்தை இந்த டிரஸ்ட்டுகளில் பதுக்கிவைத்திருக்கின்றனர்.
நரேஷ் கோயலின் மகன் நிவான், மகள் நம்ரதா ஆகியோர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு தலா ரூ.25 லட்சத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேருக்கும் கம்பெனி தரப்பில் ஆடம்பர கார் மற்றும் தனிப்பட்ட செலவுகள் அனைத்தும் தரப்பட்டன. இது தொடர்பாக விசாரிக்க நிவானுக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறார். நரேஷ் கோயலும், அவரின் மனைவியும் வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளை சமீபத்தில் வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய மகன் நிவான் பெயரில் எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.
நிவான் தற்போது வெளிநாட்டில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார். அவர் தனக்கான செலவை நரேஷ் கோயல் தன் வெளிநாட்டு வங்கிக்கணக்கிலிருந்து அனுப்பிய பணத்தில்தான் கவனித்துக்கொள்கிறார். நரேஷ் கோயலுடன் சேர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைத் தொடங்கிய ஹஸ்முக்குக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது. 1991-ம் ஆண்டு வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருக்கும் நரேஷ் கோயலுக்கு வெளிநாட்டு வங்கிகளில் நூற்றுக்கணக்கான கணக்குகள் இருக்கின்றன. இந்த வங்கிக் கணக்குகளை ஹஸ்முக்தான் பராமரித்துவருகிறார். அதோடு நரேஷ் தனது வங்கிக் கணக்குகளுக்கு ஹஸ்முக் பயன்படுத்தும் வகையில் அதிகாரமும் கொடுத்திருக்கிறார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நரேஷ் கோயல் தொடங்கியிருக்கும் டிரஸ்ட்டுகளில் ஹஸ்முக்கும் டிரஸ்ட்டியாக இருக்கிறார்.
ஹஸ்முக்கும் வெளிநாடுகளில் பல போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருகிறார். அவருக்கும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. வெளிநாட்டில் நரேஷ் கோயலுக்கும், அவரின் குடும்பத்துக்கும் எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்கும்படி அமலாக்கப் பிரிவு கேட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை; சம்மனுக்கு பதிலும் அனுப்பவில்லை’ என்று அமலாக்கப் பிரிவு தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. நரேஷ் கோயலின் மனைவி அனிதா, ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் செய்த பணிகளுக்காக ரூ.12.2 கோடி கட்டணமாகப் பெற்றிருக்கிறார்.
டாடா உட்பட சில நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பின. ஆனால் நரேஷ் கோயல் தனது பெயரில் இருக்கும் பங்கைக் குறைத்துக்கொள்ள மறுத்துவிட்டதும் ஜெட் ஏர்வேஸ் நலிவடையக் காரணம் என்று அமலாக்கப் பிரிவு தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news

0 கருத்துகள்