Header Ads Widget

Yash: பிறந்தநாள் கொண்டாட்டம், 3 ரசிகர்கள் உயிரிழப்பு; "முதலில் குடும்பத்தைப் பாருங்கள்!" - யஷ்

`கே.ஜி.எஃப்' படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான யஷ்ஷின் 38வது பிறந்த தினம் நேற்று (8.1.2024).

சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர்கள், ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் யஷ்ஷின் பிறந்த நாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் கர்நாடகாவில் ஞாயிறு இரவு முதலே ராட்சத பேனர்களைப் போட்டிப்போட்டு வைத்து கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

நடிகர் யஷ்

இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பேனர் வைக்கும் வேலையில் ஈடுபட்ட ஹனமந்தா ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20) மற்றும் நவீன் காஜி (19) ஆகிய மூன்று இளைஞர்களும் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்ட அந்த பேனர், அருகிலிருந்த மின் கம்பியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மூவரும் 21 வயதைக் கூடத் தாண்டாத சிறுவயது இளைஞர்கள். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யஷ்

இந்தச் செய்தியறிந்த நடிகர் யஷ், நேற்று மாலையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய எந்த ரசிகர்களிடமும் இந்த மாதிரி தவறான கண்முடித்தனமான ரசிகத் தன்மையை நான் ஒருபோதும் கேட்கவில்லை. இதன் காரணமாகத்தான் நான் என் பிறந்த நாளைக் கொண்டாட மறுக்கிறேன். 'ஒவ்வொரு ரசிகரும் முதலில் தங்கள் குடும்பத்திற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும்' என்பதே நான் அவர்களிடம் கேட்டுக்கொள்வது..." என்று கூறியுள்ளார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்