Header Ads Widget

சிவகங்கை: குவிக்கப்பட்ட 1500 போலீஸ்; மக்கள் வடம் பிடிக்காமல் நடந்த கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம்!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அறநிலையத்துறை மற்றும் சமஸ்தான ஊழியர்கள் வடம் பிடிக்க, ஜே.சி.பி இயந்திரம் பின்னால் வர, கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடந்து முடிந்துள்ளது.

குவிக்கப்பட்ட போலீஸ்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம், நீண்டகாலமாக நடந்துவந்த நிலையில், வடம் பிடிக்கும் உரிமை சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், 1998-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

அதன் பின்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கால், அனைத்து பிரிவினரும் இணைந்து தேர் இழுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட, மாவட்ட நிர்வாகத்தின் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடந்தது.

கண்டதேவி தேர் வெள்ளோட்டம்

2006-ம் ஆண்டுக்குப் பின்னர், குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கியதால், தேரோட்டம் நடைபெறவில்லை, 2012-ல் குடமுழுக்கு விழா நடந்த பின்பு, பழைய தேர் பழுதானதால் புதிய தேர் செய்யும் பணி தொடங்கியதாலும், தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. பல லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான், புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டுமென்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் எனவர் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கில், தேரோட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட, மாவட்ட நிர்வாகம் மீண்டும் தாமதப்படுத்தியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 'அப்பகுதி மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லை, தேரோட்டம் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம்' என்று  அரசு தரப்பில் தெரிவிக்க, ’சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், சில பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்பது கவலை அளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? அனைத்து தரப்பு மக்கள் பங்களிப்புடன் தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டும். முடியாவிட்டால், துணை ராணுவத்தை வரவழைக்க உத்தரவிடலாமா?' என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாக கேள்வி எழுப்பியது. 

மதுரை உயர் நீதிமன்றம்

உடனே சிவகங்கை மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதி மக்களையும், ஊர்த் தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ‘ஜனவரி 21-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெறும்’ என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ‘தேரோட்டம் சம்பந்தமாக 1998-ல் வழக்கு தொடர்ந்த என்னை ஆலோசானைக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை, மாவட்ட நிர்வாகமே புதிய தேரை  வெள்ளோட்டம் நடத்தலாம்' என, பல விஷயங்களைக் குறிப்பிட்டு சிவகங்கை கலெக்டருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சமஸ்தான ஊழியர்களுடன் இணைந்து செய்யத் தொடங்கியது. கடந்த மாதம் 21-ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக தேர் வெள்ளோட்டத் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

ஒருவழியாக நேற்று காலை தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதற்கு முதல்நாள் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் நடந்த கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தக நாச்சியார் கலந்துகொண்டார். அதிகாலையில் அலங்கரிக்கபட்ட தேரினை சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேருக்குப் பின் ஜே.சி.பி இயந்திரமும் வந்தது. முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அணிவகுத்துச் சென்றனர். பொதுமக்கள் வடம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குப் பாத்தியப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தபோதிலும், அவர்கள் தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்குப் பின் இருந்தபடியே தேரினை வழிபட்டனர்.

கண்டதேவி தேர் வெள்ளோட்டம்

மேலும், தேரோட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் 18 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, சிவகங்கை எஸ்.பி தலைமையில் 1,500 காவல்துறையினரின் பாதுகாப்புடன் தேர் வெள்ளோட்டம் நடந்து முடிந்து, நீண்டகாலமாக இருந்து வந்த பரபரப்பு, தற்போது அடங்கியுள்ளது.



from India News https://ift.tt/uhOp2cr
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்