7இத்தாலி நாட்டில் மகப்பேறு காலத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு, அரசு சலுகை, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு பயன்கள் வழங்குகிறது. மேற்கத்திய நாடுகளில் இது போன்ற சலுகைகள் சற்று கூடுதலாகவே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பார்பரா ஐயோல் (50) என்பவர், தனது 26-ம் வயதிலிருந்தே கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தவறான மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பித்து, பொய்யான பல தகவல்களை வழங்கி அரசின் பல சலுகைகளை அனுபவித்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-07/05e9da4d-fddd-4a7d-a457-99b311e05619/E5IL2jJXwAgMH9t.jpeg)
மேலும், கடந்த 24 ஆண்டுகளில், 17 முறை கர்ப்பம் தரித்ததாக நாடகமாடி, மகப்பேறு விடுமுறையைப் பெற்றுக் கொண்டதுடன், சுமார் ரூ.98 லட்சம் வரை அரசு நிதியையும், பல்வேறு சலுகைகளையும் அனுபவித்திருக்கிறார். இந்த சலுகைகளுக்காகக் கர்ப்பமடைந்ததைப் போல வயிற்றில் தலையணையை வைத்துக்கொள்வது, மகப்பேறு காலத்தில் கஷ்டப்படுவது போல மெதுவாக நடப்பது எனப் பல வித நாடகங்களையும் நடத்தியிருக்கிறார். மேலும், தனக்கு 5 குழந்தைகள் பிறந்ததாகவும், 12 முறை கருக்கலைந்ததாகவும் நம்பவைத்திருக்கிறார்.
ஆனால், பார்பரா ஐயோல் இதுவரை ஒருமுறை கூட கர்ப்பம் தரிக்கவே இல்லை என்பதுதான் இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இத்தனை ஆண்டுகள் மோசடியில் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்தாண்டு மீண்டும் கர்ப்பமானதாகவும், தனக்குக் குழந்தை பிறந்ததாகவும் கூறி நடித்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த, அரசு அதிகாரிகள் அவரைக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது தான் இவர் நடத்தியது நாடகம் என உண்மைகள் தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, பார்பரா ஐயோல் மோசடி செய்தது தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றிய இத்தாலி காவல்துறை, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/0aae8bfa-b9d3-487f-a18f-f8ff6a4bc3ec/WhatsApp_Image_2023_09_21_at_13_25_19__1_.jpeg)
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி செய்த பெண் பார்பராவுக்கு 1 வருடம், 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கு குறித்துப் பேசிய காவல்துறை,``பார்பரா ஐயோல் 17 முறை கர்ப்பமாக இருப்பதாகப் போலி மருத்துவ அறிக்கை தயாரித்து அரசின் சலுகைகள், மானியங்களைப் பெற்று வந்தது விசாரணையின் மூலம் தெரியவந்தது. மேலும், குழந்தை பிறந்ததற்கான சான்றாக ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து பிறப்புச் சான்றிதழ்களைத் திருடி, போலி ஆவணங்களைத் தயார் செய்து மோசடி செய்திருக்கிறார். தான் கர்ப்பமாக இருப்பதை நம்பவைக்கத் தலையணைகளை வயிற்றில் கட்டி, வயிற்றில் தழும்பு போல் தோற்றமளிப்பதற்காக மேக்கப் செய்து ஏமாற்றியிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறது.
from Vikatan Latest news
0 கருத்துகள்