Header Ads Widget

புதுச்சேரி: நாதக சார்பில் தேர்தல் களம்காணும் பெண் மருத்துவர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பதற்கும், கூட்டணி குறித்த முடிவுகள் எடுப்பதற்கும் தனித்தனிக் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க - காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியாகியிருக்கும் நிலையில், அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இன்னமும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சி, நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கடந்த தேர்தலைப் போல இந்த முறையும், 20 பெண் வேட்பாளர்களுக்கும், 20 ஆண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்க இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

நாம் தமிழர் புதுச்சேரி வேட்பாளர்

அதன்படி 20 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி வேட்பாளராக டாக்டர் ரா.மேனகா என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சித்த மருத்துவரான இவர், காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முடித்தவர். சமூக ஈடுபாடு கொண்ட இவர், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். புதுச்சேரி நகரப் பகுதியில் இவர் நடத்திவரும் சித்த வைத்தியக் கூடத்தை, கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் திறந்து வைத்தார். லாஸ்பேட்டை தொகுதியின் தொகுதிச் செயலாளராக இருக்கும் இவரது கணவர் நிர்மல் சிங், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது கூடுதல் தகவல்.



from India News https://ift.tt/TMi9uvg
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்