Header Ads Widget

மீண்டும் ‘விவாதம்’ - ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

அந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்துவருகிறது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க ஆலை நிர்வாகம் தயாராக இருக்கிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஆலையைத் திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபனைகளை நிராகரிக்க முடியாது. அந்தப் பகுதி மக்களின் நிலையையும், அவர்களின் கருத்துகளையும் ஒதுக்கிவிட முடியாது. இதில், மக்களின் நலனே முக்கியம்’ என்றனர்.

உச்ச நீதிமன்றம்

முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை தேசிய சொத்து என்று குறிப்பிட்டது. மேலும், பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைப்பதற்கான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் முன்மொழிந்தது. இது, தற்போது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தவறானவை’ என்று கூறியிருக்கிறார். மேலும், ‘தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளுமெனில், நடுநிலையான நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதற்கான காரணங்களையும் மாநில அரசு விளக்கியிருக்கிறது. அதன் பிறகும், இப்படியான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் முன்வைத்திருப்பது நியாயமற்றது. ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினர்.

அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், 15 பேர் உயிர்ப்பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். எந்தவித சட்டதிட்டங்களையும் ஸ்டெர்லைட் ஆலை மதிப்பதில்லை என்பதுதான் அதன் கடந்த கால வரலாறு’ என்று கூறியிருக்கும் கே.பாலகிருஷ்ணன், ‘உச்ச நீதிமன்றம் தனது ஆலோசனையைக் கைவிட வேண்டும்’ என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசும், ‘ஸ்டெர்லைட் ஆலையை தேசத்தின் சொத்தாகக் கருதக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிர உற்பத்தியின் தேவை குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், ‘குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் தாமிர ஆலையைத் தொடங்கவிருக்கிறது. அந்த ஆலை, நாட்டின் தாமிரத் தேவையை நிறைவுசெய்யும்’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

தலைமைச்செயலகம்

‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை தூத்துக்குடி மக்கள் விரும்பவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தமிழ்நாட்டில் பொருளாதார இழப்பு எதுவும் இல்லை. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு உகந்த பகுதியாக தூத்துக்குடி மாறியிருக்கிறது’ என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துவிட முடியுமா என்று பார்க்கிறது வேதாந்தா குழுமம். தமிழ்நாடு மக்களும், தமிழ்நாடு அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும்போது, அது சாத்தியம் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/zsoHdRm
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்