ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 வயது சிறுமி வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டிலிருந்து ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை முதற்கட்ட விசாரணையில், அது தற்கொலை மரணம் என்பதை உறுதி செய்தது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-01/c5b0123d-166f-485a-a73f-d9483fb70914/6fbc01f0-da15-494b-a723-2ce3500c7382.jpg)
இந்த நிலையில்தான் கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை, ``சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். IPS அதிகாரியாக வேண்டும் என்பது அவளின் கனவு. சிறுமியின் தற்கொலை குறித்து அவரின் தாய் அளித்த வாக்குமூலத்தில், 'என் கணவன்... அவனை என் கணவர் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. அவன் தந்தையாக இருக்கத் தகுதியற்றவன்.
தினமும் மது போதையில் என் மகளிடம் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வந்தான். அவனைத் தடுக்க முயன்றபோதெல்லாம் என்னை அடிப்பான்' எனக் கூறினார். சிறுமி எழுதியிருந்த தற்கொலை குறிப்பில், தனக்கு வெளியே யாரிடமிருந்தும் பாலியல் தொல்லை இருந்ததில்லை. ஆனால், தன் தந்தையால் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதை பற்றி எழுதியிருந்தாள். தவறே செய்யாமல் திட்டப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தாள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/0aae8bfa-b9d3-487f-a18f-f8ff6a4bc3ec/WhatsApp_Image_2023_09_21_at_13_25_19__1_.jpeg)
சிறுமியின் தந்தை ஒரு கேரேஜில் பணிபுரிந்து வந்தார். குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள கிராமவாசிகளிடம் அவர் குறித்து விசாரித்தோம், அவரைப் பற்றிப் பல எதிர்மறையான தகவல்கள்தான் கிடைத்திருக்கின்றன. பெண்களைப் பற்றித் தகாத பேச்சுகள் பேசுபவராகவே இருந்திருக்கிறார். தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடி வருகிறோம். விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்திருக்கிறது.
from Vikatan Latest news
0 கருத்துகள்