தலைக்கு மேல் தொங்கிய யெல்லோ லைட், ஐஸ்கிரீம் மெஷினிலிருந்து வழியும் ஐஸ்கிரீமை பார்க்கும்போது வானவில் வடிந்து கப்பிற்குள் விழுவதுபோல இருந்தது. வெனிலா, சாக்லேட், பாதாம் என ஆளுக்கொரு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து வந்தமர்ந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்த மேசையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் அமர்ந்திருந்தார். அவரின் பார்வை, தங்களைச் சுற்றி உலகம் இருக்கிறது என்பதை யோசிக்காமல், எதையோ பேசி சத்தமாக சிரித்துக்கொண்டே இருந்த ஓர் ஆண், பெண் மீதிருந்தது. 'புதுசா கல்யாணம் ஆகியிருக்கா' எனக் கேட்டுக்கொண்டே அந்தப் பெண்ணின் கழுத்து, கால்களை நோட்டமிட்டார். 'இல்ல அங்கிள்' என அந்தப் பெண் படபடத்தாள். திடீரென அவனின் கையைப் பிடித்து, சர்ப்ரைஸாக ஒரு பூங்கொத்து கொடுத்து, அவள், 'லவ் யூ' என்று தன் காதலை அவனிடம் வெளிப்படுத்தினாள். அவனோ ஆச்சர்யத்தின் உச்சத்தில் இருக்க, எதிரிலிருந்தவர், 'கலிகாலம், பொண்ணுங்க கூட காதலை வெளிப்படையா சொல்ல ஆரம்பிச்சுருச்சுங்க'...என தலையில் அடித்துக்கொண்டே நகர்ந்தார்.
'காதலைத்தானே சொன்னாள். இவர் ஏன் இப்படி சலித்துக்கொள்கிறார்' என்று யோசித்துப் பார்த்தேன். அவர் மட்டுமல்ல, காப்பியங்கள் தொடங்கி தமிழ் சினிமாக்கள் வரை பெரும்பாலான இடங்களில் காதலை முதலில் சொல்வது ஆண்கள் என்றே காட்சிப்படுத்தப்படுத்தியிருக்கிறார்கள். காதல் என்பது இருமனம் கலந்தது. ஆனால், வெளிப்படுத்துவது மட்டும் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். 'லவ்வு கிவ்வுனு வந்து நின்ன, படிப்பை நிறுத்திடுவேன்' என கண்டிஷன்களுடன் என்னை காலேஜ் அனுப்பிய அப்பா, என் தம்பியிடம், 'யாரையாவது லவ் பண்றியா? சொல்லு பேசுவோம்' எனக் கேட்டது என்னை உறைய வைத்தது. காதல் திருமணம் செய்த ஆண் நண்பர்களிடம் கேட்கும் போது, எல்லா நண்பர்களும் 'முதலில் காதலை வெளிப்படுத்தியது தானே' என்று சொன்னார்கள். அப்படியென்றால் காதல் என்பது ஆண்களுக்கான பொக்கிஷமா ? காதலிப்பதை பகிரங்கமாகச் சொல்ல பெண்களுக்கு உரிமை இல்லையா என்ற தேடல் இந்த அத்தியாயத்திற்கான ஆரம்பபுள்ளி ஆனது.
என்னுடைய பதின்ம வயதில் சீதா அக்கா எனக்கு அறிமுகம் ஆனாள். மெலிந்த தேகம். கழுத்தில் கறுப்பு கயிறு. பார்த்ததும் ரசிக்கத்தூண்டும் நீள கூந்தல், மேட்சிங் இல்லாத தாவணி, பாவாடை , ஜாக்கெட். ஆனால், வசீகரிக்கும் அழகு. சீதா அக்காவும், அடுத்த தெருவில் இருந்த குமார் அண்ணணும் காதலிப்பதாக அரசல்புரசலாக பேச்சு அடிபடும். தெருவில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் சூழலில் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடப்பார்கள். பம்புசெட்டில் சீதா அக்கா துணி துவைக்க வரும்போது, தன் சோட்டுப் பையன்களுடன் குமார் அண்ணணும் வந்து நிற்பார். திருவிழா என்றால் ராட்டிணம் ஏறும் இடம், பொங்கல் வைக்கும் இடம் என எல்லா இடங்களிலும் குமார் அண்ணன் காற்றில் மிதப்பார். படிப்பு, வேலை என வெளியூர் வந்ததால் அதன்பின் சீதா அக்காவுடன் தொடர்பே இல்லாமல் போனது. சில வருடங்களுக்கு முன் சொந்த ஊர் சென்றிருந்தேன். சீதா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. கழுத்தில் அதே கறுப்பு கயிறு இருந்தது. தயக்கத்துடன், 'அக்கா, குமார் அண்ணே' என்றேன். கலங்கிய கண்களுடன் 'இதே ஊர்லதான் இருக்கான்' என்றாள். 'அப்போ கல்யாணம்' என்றேன். ''குமாரோட அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சதும், என் காதலை அவன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள எங்க அக்காவும், மாமாவும் ஒரு விபத்துல தவறிட்டாங்க. அக்கா குழந்தைக்கு மூளை வளர்ச்சி கிடையாது. குழந்தையை நான் பார்த்துக்க வேண்டிய கட்டாயம். குமார்கிட்ட காதலைச் சொன்னா, எங்களை பாரமாக நினைச்சுருவானோனு தயங்கி என் காதலை அவன்கிட்ட சொல்லவே இல்ல. அந்த நேரத்துல ஒருத்தர் என்னைய பொண்ணு பார்க்க வந்தாரு. சூழலை சமாளிக்க வழி இல்லாம, எனக்கு கல்யாணம் வேணாம். குழந்தைக்காக வாழணும்னு முடிவு பண்ணிருக்கேன்னு சொன்னேன். அது குமார் காது வரைக்கும் போயிருச்சு. என்னை நோகடிக்க வேண்டாம்னு அவனும் அவன் காதலை என்கிட்ட சொல்லல. சில வருசத்துக்கு அப்புறம் அவனோட திருமணத்துக்கு பத்திரிகை குடுக்க வந்திருந்தான். 'நீ போற இடத்துக்கு எல்லாம் பின்னாடியே வந்து உன்ன கஷ்டப்படுத்திட்டேன். ஆனா, உன் முடிவை மதிச்சு நான் வேற கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தேன்'னு சொன்ன போது குமாரை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுச்சு.
தயக்கத்தைவிட்டுட்டு அவன்கிட்ட என் காதலை, ஒரு முறையாவது சொல்லிருக்கலாம்னு இப்போ கூட ஃபீல் பண்றேன். சொல்லிக்காத காதல் ரெண்டு பேர்கிட்டயும் இருந்தது உண்மை. இப்போ அவன் இதே ஊர்ல இருக்கான். தனியா இருக்கிற எனக்கு அதுவே ஒரு தெம்புதான். கூட இல்லனா காதல் இல்லைனு ஆயிருமா. நான் செத்தா தூக்கிப்போட அவன் இருக்கான்கிற நம்பிக்கையிலதான் வாழ்ந்திட்டிருக்கேன்'' என சீதா அக்கா 45 வயதில் புலம்புவதைக் கேட்டபோது, தேற்ற வார்த்தைகள் இல்லாமல் அமைதி ஆனேன். காதல் என்பது கல்யாணமோ, காமமோ, கிடையாது. அது உடன் இருத்தலுக்கான உணர்வே என்று தோன்றியது. இது சொல்லப்படாத காதல். ஆனால், பகிரக்கூட ஆள் இல்லாமல், கேட்கப்படாத காதல் தோல்விகளும் எத்தனையோ பெண்களின் மனதை அழுத்திக்கொண்டு இருக்கும் தானே..?
நீண்ட உரையாடலின்போது அப்பா தன் பழைய காதலை பற்றி பேசத் தொடங்கினார். தன் காதலை அவர் சொன்னபோது அதை ரசித்துக் கேட்டேன். ஒரு பெண் தன்னை எப்படி உருகி உருகி காதலித்தாள் என்ற பெருமையை அப்பாவிடம் உணர முடிந்தது. எந்தச் சலனமும் இல்லாமல் கிரைண்டரில் மாவு வழித்துக்கொண்டே அம்மாவும் இந்தக் கதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பாவின் கதையை ரசித்துக் கேட்ட என்னால் அம்மாவுக்கும் ஒரு காதல் கதை இருந்திருக்கலாமோ என்பதை கேட்கத் தயக்கமாக இருந்தது.
அப்படி கேட்டு , அம்மா 'ஆம் ' என்றால் அம்மாவிற்கு நாம் கொடுத்துள்ள உயர்ந்த தியாக அடையாளம் உடைந்துவிடும் என்ற பயம். குடும்பம் சிக்கலாகும் என்ற தயக்கம். அதனாலேயே அம்மாக்களின் காதல் கதைகள் கேட்கப்படுவதே இல்லை. நம் அம்மாவின் காதல் அப்பாவுடனான திருமண ஆல்பத்திலிருந்தே தொடங்குகிறது. அம்மாக்களின் காதல் கதையை நாம்தான் கேட்பதில்லை. அப்பாக்களுக்காவது தெரியுமா என்றால் அதுவும் சந்தேகமே...
புதிதாக திருமணம் முடிந்தவள் தோழி சௌமியா. திருமணத்தன்று இரவு எல்லா ஆண்களும் கேட்கும் வழக்கமான கேள்வியான, ' யாரைவாது லவ் பண்ணிருக்கியா' என்பதை சௌமியாவின் கணவரும் கேட்டுள்ளார். ' நான் யாரையும் லவ் பண்ணலனு சொல்லிட்டேன்' என்றாள். 'ஏண்டி ரமேஷை காதலிச்சதுபத்தி சொல்லிருக்கலாம்ல, ஒரு வேளை அவர் அதை இயல்பா எடுத்திருந்தா உனக்கு குற்ற உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்ல' என இன்னொரு தோழி கேட்டாள். 'தனக்கு 4 காதல் இருந்ததை அவரு சொன்னாரு. ஆனா, நான் என் முதல் காதலைச் சொன்னா எப்படி எடுத்துப்பாருனு தெரியல. எங்க அக்கா இப்படித்தான் தன் முன்னாள் காதலை மாமாகிட்ட சொன்னா. அதுக்கு அப்புறம் அவரு சந்தேகப்பட்டு கொடுமை படுத்துனாரு... அதுக்காக எல்லா ஆண்களும் அப்படின்னு சொல்ல வரல.... இவரும் சந்தேகப்பட்டா என்ன பண்றதுனு பயத்துல சொல்லல' என செளமியா சொன்னாள்.
பெண்கள் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், காதலிப்பதை, காதலித்ததை பெண்கள் சொன்னால், ஆண்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ... அழைத்ததும் பைக்கில் ஏற சம்மதித்தால் எப்படியெல்லாம் ஜட்ஜ்மென்ட் செய்வார்களோ... தன் முன்னாள் காதல் பற்றி தெரிந்தால் பேசினால் கணவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற பயமும், பதற்றமும் பெண்களின் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஏனெனில், காதல் என்பது ஆண்களுக்கு இளமையின் பரிணாமமாகவும், பெண்களுக்கு, 'கற்பின்' பரிணாமமாகவும் பார்க்கப்படுகிறது. போல்டான பெண்களை பெஸ்டியாக வைத்திருக்கும் ஆண்கள்கூட, காதலைச் சொல்ல வரும் பெண்களை எளிதாக ஜட்ஜ்மென்ட் வளையத்திற்குள் தள்ளிவிடுகிறார்கள்.
'பொண்ணுங்க ஆசையா காதலிப்பாங்க, ஆனா, ஈஸியா கழட்டி விட்டுருவாங்க' என நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தாடி வளர்த்து, மது அருந்தி வெளிப்படுத்தவில்லை என்பதற்காக பெண்களுக்கு வலியே இருக்காது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். காதலிப்பதை சொல்லவே உரிமை தராத சமூகம், அதன் வலிகளையும் நினைவுகளையும் சொல்ல மட்டும் காதுகள் கொடுக்குமா..? காதலைச் சொல்லவும், காதலித்ததைச் சொல்லவும் தேவையான சுதந்திரம் பெண்களுக்கு இயல்பாய் இருப்பதில்லை...அதற்காக கணவனின் முன்னால் காதலை எல்லா பெண்களும் செளமியாவைப் போல் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லவரவில்லை... கணவன்மார்களை டார்ச்சர் செய்யும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒப்பீட்டளவில் ஆண்களின் முந்தைய காதல் போல் பெண்களின் முந்தைய காதல் இங்கு இயல்பாக கடக்கப்படுவதில்லை.
காதல் மலர்ந்த தருணம் எந்த கோட்பாடிற்குள்ளும் உட்படாமல் இருந்திருக்கும். அந்த இயல்பு தான் காதலின் அழகு. ஆணோ, பெண்ணோ காதல் மலர்ந்த நிமிடம் போன்றே அது விலகும் நிமிடமும் இயல்பாய் இருந்தால் காதல் காதலாகவே வாழ்க்கையில் தொடரும்...தோல்வியாக அல்ல. ஒரு நேரத்தில் ஒரு நபரின் மீது இருக்கும் வரை காதலில் எந்தத் தவறும் இல்லை. என்பதே நிதர்சனம்.
காதல் என்பது அழுகை, கோபம் போன்ற நுண்ணிய உணர்வு. காதலிக்கும் போது, புரட்சி பேசும் பெண்கள் கூட பட்டாம் பூச்சியாக மாறிவிடுவார்கள். உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத ஆண்கள் கூட உருகி, உருகி அன்பை கொட்டுவார்கள். பைத்தியக்கார தனங்கள் நிறைந்த அந்த காதல் அழகானது. அதனால் தான் அம்மாஞ்சிகளாக இருக்கும் முதல் காதல்கள் எப்போதும் அழகானவையாக இருக்கும். திருமணத்திற்கு பின்னால் கணவன் மீதோ, மனைவி மீதோ வரும் காதல் பக்குவப்பட்ட காதலாக இருக்கும். அதில் பைத்தியக்காரத்தனங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. வாழ்க்கையின் தேடல்கள் இருப்பதால் திருமணம் என்று வரும்போது, ' குடும்பத்தை கவனிக்க வேண்டும்', 'பொறுப்பாக இருக்க வேண்டும்', 'கை நிறைய சம்பாதிக்க வேண்டும்', 'தன்னை ராணி போல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என எதிர்பார்ப்புக்குள் சுருங்கிக்கொள்கிறோம்.
காதல் என்பது குற்றமல்ல... அது ஓர் உணர்வு... ஆனால், பெண்களின் காதல் மட்டும் பல நேரங்களில் ஆகச்சிறந்த குற்றமாக பார்க்கப்படுகிறது. விண்வெளிக்கே பெண்கள் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்...ஆனால், இன்னும் ஏன் காதலைச் சொல்வதிலும், காதல் கதையைப் பகிர்வதிலும் ஆண்களுக்கு முதலிடம்...ஒரு பெண் காதலை முதலில் வெளிப்படுத்துவதை ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். தாகூரின் கவிதைகளை விட, அது ரசனையுள்ள ஒன்றாக வாழ்க்கையில் நீடிக்கும். காதலையோ, அது தந்த வெற்றிடத்தையோ இயல்பாகப் பேச பெண்களை அனுமதிப்போம். 'காதலிக்கவில்லை' என்ற பொய்யை நம்புவதைவிட, 'ஆம், காதலித்தேன்', என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள பழகுவோம்., அம்மாக்களின் காதல் கதைகளுக்கும் காது கொடுப்போம். பெண்கள் தங்கள் காதலை பகிர்வதை நார்மலைஸ் ஆக்குவோம். அமுங்கிக் கிடக்கும் அழுத்ததிலிருந்து விடுபட்டு அவளின் சிறகுகள் விரிய தேவையான சாவி நம் எண்ணங்கள் மட்டும் தான். உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளின் சிறகு விரிய துணை நிற்போம்!
from Vikatan Latest news

0 கருத்துகள்