Header Ads Widget

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி - கைதான தம்பதியின் பகீர் பின்னணி

அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(26). இவர், தன்னுடைய வருங்கால மனைவி கீர்த்தனாவுக்கு அரசு வேலை வாங்க ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை அணுகியுள்ளார். அரசு வேலை வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என தினேஷ்குமாரிடம் மோகன் கூறியிருக்கிறார். அதற்கு தினேஷ்குமாரும் சம்மதித்து, மோகனிடம் 9 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து மோகன், அரசு வேலைக்கான ஆர்டர் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதனால் தினேஷ்குமாரும் அவரின் வருங்கால மனைவி கீர்த்தனாவும் மகிழ்ச்சியடைந்தனர். அந்த ஆர்டரைக் கொண்டு அரசு வேலையில் சேர சென்றபோதுதான் அது போலி எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், யானைக்கவுனி காவல் நிலையத்தில் மோகன் குறித்து புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகனிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மோகன்

இதுகுறித்து யானைக் கவுனி போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த தினேஷ்குமார் இன்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை, பெங்களூருவில் வேலை செய்து வந்திருக்கிறார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் தினேஷ்குமார் வேலைக்குச் செல்லாமல் ஓய்விலிருந்தார். தற்போது அவர் வேலை தேடிவந்த நிலையில் அவருடன் படித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனாவுடன் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில்; கீர்த்தனாவுக்கு அரசு வேலைக்காக அவரின் அம்மா முயற்சி செய்து வந்தார். இதற்காக ஈரோடு DEO அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை கீர்த்தனாவின் குடும்பத்தினர் அணுகியிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரமூர்த்தி, சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் மோகனை தினேஷ்குமார் சந்தித்து பேசியபோது மின்வாரியத்தில் உதவியாளர் வேலை வாங்கிக் கொடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கிறார். வேலைக்கான நியமன ஆர்டர் கொடுத்த பிறகே பணத்தைக் கொடுங்கள் என்று நம்பிக்கை தரும் வகையில் மோகன் பேசியுள்ளார்.

அதனால் கீர்த்தனாவின் அம்மா தன்னுடைய தங்க நகைகளை அடமானம் வைத்து 9 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்தார். பின்னர் கடந்த ஜனவரியில் கீர்த்தனாவின் கல்வி சான்றிதழை சரி பார்க்க வேண்டும் தலைமைச் செயலகத்துக்கு வாருங்கள் என்று மோகன் அழைத்திருக்கிறார். அதனால் கீர்த்தனாவின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு வந்து மோகனைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அவர், தலைமைச் செயலகத்தில் பல அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு அங்குள்ள வராண்டாவிலேயே கீர்த்தனாவின் கல்வி சான்றிதழ்களை சரிப்பார்த்திருக்கிறார். இதையடுத்து ஒரு வேலைக்கான நியமன ஆர்டரையும் கீர்த்தனாவின் குடும்பத்தினரிடம் காண்பித்திருக்கிறார் மோகன். அதனால் மோகனை கீர்த்தனாவின் குடும்பத்தினர் முழுமையாக நம்பியுள்ளனர். வேலைக்கான ஆர்டர் வீடு தேடி வரும் என மோகன் கூறியிருக்கிறார்.

கைது

அதனால் கீர்த்தனாவின் குடும்பத்தினர் ஈஸ்வரமூர்த்தியின் வங்கி கணக்குக்கு இரண்டு லட்சம் ரூபாயும் மோகன் மற்றும் அவர் கூறிய ஒரு வங்கி கணக்குக்கு 7 லட்சம் ரூபாயையும் ஆன் லைன் மூலம் அனுப்பி வைத்தனர். மற்றும் ஒரு மாதம் கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என கீர்த்தனாவிடம் மோகன் கூறியுள்ளார். அதன்படி கோயமுத்தூரில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திலும் கீர்த்தனாவை மோகன் சேர்த்திருக்கிறார். அங்கு கீர்த்தனாவின் பெயரில் எஸ்.ஆர். புத்தகம் ஒன்றை ரெடி செய்து அதில் அவரின் பயிற்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள். பயிற்சி சான்றிதழ் வந்ததும் வேலைக்கான ஆர்டர் கிடைக்கும் என மோகன் நம்பிக்கையளித்திருக்கிறார். ஆனால் சில மாதங்கள் கடந்த பிறகும் கீர்த்தனாவுக்கு பணி நியமன ஆர்டர் வரவில்லை. அதனால் மோகனை தொடர்புக் கொண்டு கீர்த்தனாவின் அம்மாவும் தினேஷ்குமாரும் பேசியுள்ளனர். அப்போது 24-ம் தேதி சென்னைக்கு வரும்படி மோகன் கூறியிருக்கிறார். அதனால் இருவரும் சென்னைக்கு வந்து மோகனை சௌகார்பேட்டையில் சந்திருக்கிறார்கள். அப்போது மோகன், கீர்த்தனாவின் பெயர் எழுதப்பட்ட நியமன ஆர்டரைக் கொடுத்திருக்கிறார். அதைப்பார்த்த கீர்த்தனாவின் அம்மாவுக்கும் தினேஷ்குமாருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதுகுறித்து மோகனிடம் விசாரித்தபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்துதான் தினேஷ்குமார், எங்களிடம் புகாரளித்தார். அதன்பேரில் ஈரோட்டைச் சேர்ந்த மோகனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி கௌசல்யா ஆகியோரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் கீர்த்தனாவைப் போல இன்னும் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1,47,000 ரூபாய், ஒரு லேப்டாப், 9 செல்போன்கள், 34 போலி பணி நியமன ஆர்டர்கள், 48 போலி அரசு முத்திரைகள், 8 போலி அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்