Header Ads Widget

'பாஜக-வின் அவதூறு தேர்தல் விளம்பரம்' - குட்டு வைத்த கொல்கத்தா நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியது முதலே பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகிறது. நாள்கள் செல்ல, செல்ல அதன் வீரியம் மேலும் அதிகரித்து கொண்டே சென்றது. குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் கூறிய கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் பா.ஜ.க-வின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கடந்த 2006-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதாவது அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கும், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது" என பேசினார்.

இதேபோல் கர்நாடக பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதேபோல் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "தனிச்சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது" என தெரிவித்து இருந்தார். இதேபோல் பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்த போது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்" என சொல்லியிருந்தார். ராஜ்நாத் சிங், "சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது." என கூறியிருந்தார். இந்த பேச்சுக்கள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின.

திரிணாமூல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

இந்த சூழலில்தான் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து இருந்தது, பா.ஜ.க. அதில், மம்தா தலைமையிலான அரசு பல்வேறு விஷயங்களில் ஊழல் செய்துவிட்டதாக சொல்லப்பட்டு இருந்தது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ், 'தேர்தல் ஆணையத்தில் தங்கள் மீது உண்மைக்கு புறம்பான, அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் பா.ஜ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் கடுப்பான மம்தா கட்சி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், 'புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சப்யசாச்சிச் பட்டாட்ச்சார்யார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், "குறிப்பிட்டட் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிறகு புகாரை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் போட்டியாளர்களை அவமதிக்கும் விதமாகவும், தனிப்பட்டட் தாக்குதல்களை கொண்டதாகவும் உள்ளது.

மம்தா பானர்ஜி, மோடி

இது நேரடியாக தேர்தல் நடத்தை விதிகளை மீறும் நோக்கிலும், நியாயமான சுதந்திரமான தேர்தல் செயல்முறைக்கான உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது. எனவே மறு உத்தரவு வரும் வரை திரிணமூல் காங்கிரஸ் குறித்துத் அவதூறு விளம்பரங்களை வெளியிட பா.ஜ.க-வுக்கு தடை விதிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பா.ஜ.க-வின் தேர்தல் செயல்பாடுகள் மீண்டும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆனால், 'பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை' என தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மற்றொரு சம்பவமாக, மக்களவை தேர்தல் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை அடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பாஜக வேட்பாளருமான அபிஜித் கங்கோபாத்யாயா 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பாஜகவின் தமலுக் மக்களவை தொகுதி வேட்பாளரான கங்கோபாத்யாயா, கடந்த மே 15-ம் தேதி ஹால்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மேற்கு வங்க முதல்வர் பானர்ஜிக்கு எதிராக பேசியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/NodjRWb
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்