தெலங்கானா தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மெளனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி விட்டனர். ஏன்?. நான் காங்கிரஸ் இளவரசரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது?. எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என கொதித்தார்.
இதில் கடுப்பான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதலில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், "மோடி ஜி, பயப்படுகிறீர்களா?. பொதுவாக பூட்டிய அறைகளில்தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை. அவர்கள் இருவரும் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். இதில் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா?. ஒரு காரியம் செய்யுங்கள். அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி" என வெடித்திருந்தார்.
பின்னர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை உணர்ந்திருக்கும் பிரதமர் மோடி நமது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யக்கூடும். அடுத்து அவர் பிரதமராக வர மாட்டார். அதனால் இன்னும் 4-5 நாட்களுக்கு அவர் நமது கவனத்தை திசைத் திருப்ப முடிவெடுத்திருக்கலாம். அவர், சில நாடகங்களையோ வேறு சில வேலைகளையோ செய்யலாம். ஆனாலும் உங்கள் கவனம் சிதறி விடக் கூடாது. வேலைவாய்ப்பின்மை மிகவும் முக்கியான பிரச்னை. 2 கோடி வேலைகள் வழங்குவேன் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய். அவர் பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி போன்றவற்றையே கொடுத்தார். மேலும், அதானி போன்றவர்களுக்கு சேவை செய்தார். நாங்கள் ‘பாரதி பரோசா திட்டத்தை’ கொண்டு வர இருக்கிறோம். இண்டியா கூட்டணி ஜூன் 4-ம் தேதி ஆட்சி அமைக்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து 30 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வேலையைத் தொடங்கும்" என தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த வீடியோ எதிர்வினைகள் தேர்தல் களத்தில் ரீச் ஆகிறது. எனினும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஜூன் 4-ம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "முதல் கட்ட தேர்தல் முடிந்ததுமே பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் பிறகு பரப்புரைகளுக்கு பதிலாக பொய்யுரைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத விஷயங்களை பேசினார். அதாவது உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை பிடுங்கி கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கிட்னியில், ஒரு கிட்னியை எடுத்துவிடுவார்கள் என்ற தொனியில் பேசி வருகிறார். கேவலமான, கீழ்த்தரமான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சொத்துகளை அனைவருக்கும் சமமாக கொண்டு செல்வோம் என்றுதான் காங்கிரஸ் சொல்கிறது. நில உத்தரவு சட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு கொடுப்போம் என்கிறார்கள். முஸ்லிம் என்கிற வார்த்தையே இல்லை.
ஆனால் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என பேசினார்கள். அதன் தொடர்ச்சியாகவே அம்பானி, அதானி விஷயத்தை மோடி கையில் எடுத்துள்ளார். மூன்றாம் கட்ட தேர்தல் பாஜக-வுக்கு சாதகமாக இல்லை. குஜராத்தில் இரண்டு, மூன்று தொகுதிகளில் தோல்வியை சந்திப்பார்கள். கர்நாடக, மகாராஷ்டிரா, பீகாரில் மோடிக்கு பின்னடைவுதான். இதையடுத்து அம்பானி, அதானி காங்கிரஸூக்கு பணம் அனுப்புகிறார்கள் எனக் கூறி, ராகுல் காந்தியை வம்பில் மாட்டி விடுவதாக நினைத்து அம்பானி, அதானியை மாட்டி விட்டுவிட்டார். இது அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு பிரதமர் விளையாடும் விளையாட்டாக கூட இருக்கலாம். நான் இதுபோல் பேசுவேன். நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள். ஆட்சிக்கு வந்ததும் நட்பை தொடருவோம் என சொல்லி இருப்பார்.
ஒருவேளை அவர்களுக்கு தெரியாமல் சொல்லி இருந்தால் காங்கிரஸூக்கு சென்ற பணத்தை கண்டுபிடிக்காமல் இருந்தது, உங்களுடைய தவறுதானே. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் தூங்கி கொண்டு இருக்கிறதா?. தேர்தல் பத்திரம் மூலம் காங்கிரஸூக்கு நிதி வழங்கிய நிறுவனங்கள் மீது நீங்கள் சோதனை நடத்தி இருக்கிறீர்களே. அம்பானி, அதானி சேர்ந்து போடும் நாடகம். பிரதமர் மோடி அதானி விமானத்தில்தான் பயணம் மேற்கொள்கிறார். அவர்கள் சேர்ந்து செய்யும் டிராமா. நாட்டில் இருக்கும் சிறு குழந்தைகூட பிரதமர் மோடியின் பேச்சை நம்பாது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/pEH07XZ
via IFTTT

0 கருத்துகள்