Header Ads Widget

”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” - சொல்கிறார் திருமாவளவன்!

கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ``தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவை. வி.சி.க தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நுாற்றாண்டு கடந்து விட்டது. எனவே, கூட்டணியில், எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தான் முழக்கமிட்டோம். எனவே, விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல நாங்கள்.

திருமாவளவன்

இது பல ஆண்டுகளைக் கண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியாதது இல்லை. தி.மு.க கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை, கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்கள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. அது சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலாகும். டில்லியில், இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி, தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தை ஆண்ட, ஆளுங்கட்சியாக இருக்கின்ற தி.மு.க, அ.தி.மு.க இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்கள் ஆதரவை பெற்று இருக்கிறார்கள் என பொருள்.

தமிழகத்தில் பா.ஜ.க-வால் அரசியல் செய்ய முடியவில்லை. தனித்து அவர்களால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்க முடியவில்லை. தி.மு.க அல்லது அ.தி.மு.க-வோடு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற வயிற்று எரிச்சலால், ஹெச்.ராஜா புலம்பி வருகிறார். இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பது தான் ஆளுநரின் திட்டம்.

இந்தியாவிலேயே மிகச் சிறப்பான கல்வித் திட்டத்தையும், உயர் கல்வி படிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம். வட மாநிலங்களில், இருந்து மருத்துவம், பொறியியல் போன்ற கல்விக்கு ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தின் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டது என ஆளுநர் அரசியலுக்காக விமர்சனம் செய்கிறார். அவர் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறாரே தவிர, தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்துவிட்டார்" என்றார்.



from India News https://ift.tt/AetD90u
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்