Header Ads Widget

மகன் திருமணத்துக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு - கோவை செல்வராஜ் மரணம்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96 காலகட்டத்தில் கோவை மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக (காங்கிரஸ்) இருந்தார்.

கோவை செல்வராஜ்

சிறுவாணி என்ற மினரல் வாட்டர் நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடக்கத்தில் பூச்சியூர் செல்வராஜ் என்றழைக்கப்பட்டவர், நாளடைவில் கோவை செல்வராஜ் என்றழைக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் இருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு செல்வராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கோவை செல்வராஜ்

இதையடுத்து அவர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு திமுகவில் இணைந்தார். கட்சி நிகழ்ச்சிகளில் ஆக்டிவாக பங்கேற்று வந்தார்.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கோவை வந்தபோது அவர் தலைமையில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் செல்வராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில் செல்வராஜ் தன் மூன்றாவது மகனின் திருமணத்துக்காக இன்று திருப்பதி சென்றிருந்தார்.

கோவை செல்வராஜ்

அங்கு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை  செல்லும் வழியிலேயே செல்வராஜ் உயிரிழந்துவிட்டார். அவரின் உடல் நாளை காலை கோவை கொண்டு வரப்படுகிறது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்