Header Ads Widget

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க.

“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது செய்வதைத் தவிர்த்து, மற்ற எல்லா வேலைகளையும் பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் வருவது என்பது, எந்தக் காலத்திலும் ஏற்புடையதல்ல. இப்போது ‘சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக நடத்துவோம்’ என்பார்கள். இன்னும் சில காலம் போன பிறகு, ‘இரண்டு தேர்தல் எதற்கு… ஒரே நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் இருக்கட்டும்’ என்பார்கள். இப்படி மாநிலக் கட்சிகளின் அதிகாரத்தை மொத்தமாக அழித்தொழித்து விட்டு, தேசியக் கட்சி, தேசியத் தலைவர்கள் என மட்டும் வைத்துக்கொண்டு, அதிபர் தேர்தலை நடத்தத் திட்டமிடுவார்கள். இதுவே அவர்களின் நீண்டகால அஜண்டா. இதனால், ஜனநாயக நாட்டின், கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் இந்தத் திட்டம், நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. எனவே, இதை தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் நிறைவேற்ற விடாது!”

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“முதல்வர் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பேசுகிறார். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகான முதல் மூன்று தேர்தல்களும் நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டுக்கும் ஒன்றாகவே நடந்தன. அன்றைய காங்கிரஸ் அரசு, பல மாநில அரசுகளின் ஆட்சியைக் கலைத்தது. அதன் காரணமாகவே இரண்டு தேர்தல்களையும் வெவ்வேறு காலகட்டத்தில் நடத்தவேண்டிய சூழல் உண்டானது. ஏற்கெனவே நடைபெற்ற ஒரு நடைமுறையை இப்போது மீண்டும் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது... முறைப்படி ஜனநாயகபூர்வமாக நடக்கப்போகும் ஒரு தேர்தல், அதிபர் ஆட்சிக்கு எப்படி வழிவகுக்கும்... நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால், தி.மு.க-வின் செல்வாக்கு மொத்தமாகச் சரிந்துவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தவறான கருத்துகளையெல்லாம் சொல்லி எதிர்க்கிறார்கள். அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கின்றன. தற்போதைய தேர்தல் நடைமுறைகளால் ஏற்படும் பொருளிழப்பு, நேரமிழப்பு, பணிச்சுமை போன்ற பல்வேறு சிக்கல்களுக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தீர்வு கொடுக்கும்!”



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்