Header Ads Widget

Delhi Election: Micro management வியூகம்; பிரசாரத்தில் நட்சத்திரங்கள்; அனல் பறக்கும் டெல்லி தேர்தல்!

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பரபரப்பாகக் கவனிக்கப்படும் தேர்தலில் ஒன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல். 70 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றி, ஆட்சியமைக்கும். இந்த சட்டமன்றத்துக்கான தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து மூன்றாம் முறையும் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஆம் ஆத்மி, 27 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போராடும் பா.ஜ.க, 2013-க்கும் பிறகு வாஷ்அவுட்டான காங்கிரஸ் என மூன்று முக்கியக் கட்சிகளும் தீயாக வேலை செய்துவரும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதையும், வெற்றியை தொட ஒவ்வொரு கட்சியும் ஓடும் ஒட்டம் குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.

அண்ணா ஹசாரேவின் 'ஊழல் ஒழிப்பு' இயக்கத்தில் தீவிரப் பற்றுடன் இயங்கிய அரவிந்த கெஜ்ரிவால், ஊழலை துடைத்தழிக்க, துடைப்பத்துடன் 2012-ம் ஆண்டு கட்சியைத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குதித்து 28 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, முதல்வராகவும் அரியணை ஏறினார். அண்ணா ஹசாரேவின் நீண்டநாள் கோரிக்கையான 'ஜன் லோக்பால் மசோதா'-வுக்கு ஆதரவளிக்காத காங்கிரஸ் 49 நாள்களில் தன் ஆதரவை வாபஸ் பெற்றது. அதனால் முதல்வர் பதவியை இழந்தார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

2015-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில், 54.3 சதவிகித வாக்குகளுடன், 67 இடங்களில் வென்று, காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை வாஷ்அவுட் செய்து இரண்டாம் முறையாக தன் சாம்ராஜ்யத்தை நிறுவியது ஆம் ஆத்மி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேசியளவில் கவனம் பெற்ற ஆம் ஆத்மியின் பல்வேறு முன்மாதிரி திட்டங்கள், மக்கள் ஆதரவையும் பெற்றது. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், 53.57 சதவிகித வாக்குகளைப் பெற்று, 62 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

டெல்லி மாடல்:

மின்சாரம், குடிநீருக்கான மானியங்கள், புதுப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகள், இலவச மின்சாரம், டெல்லியின் முக்கியப் பிரச்னையான காற்று மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முதன்மைத் திட்டங்கள், 'டெல்லி மாடல்' என்று அழைக்கப்படும் அளவு கவனம் பெற்றது. 'இதெல்லாம் நிரந்தரத் திட்டங்கள் இல்லை... தொடர்ந்து இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகக் கொண்டுசெல்லமுடியாது' எனக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள் கூட, இந்த (2025) தேர்தல் வாக்குறுதிகளில், ஆம் ஆத்மி அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றன. இதுவே ஆம் ஆத்மி கட்சியின் பெரும் பலம்.

கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே
முதல்வர் வேட்பாளர் யார்?

முக்கோணத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது தெளிவாக முடிவான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இறுதிவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது போல, காங்கிரஸும், பா.ஜ.க-வும் இப்போதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. டெல்லி முழுவதும் `யார் முதல்வர் வேட்பாளர்?" என்ற கேள்வியுடன் ஆம் ஆத்மி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது. அந்தளவு இரு கட்சிகளிடமும் முக்கியத் தலைமை இல்லாததும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் கட்சி என்ற பிம்பத்துடன், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தன் வளர்ச்சியைப் பதிவு செய்துவருவதும் அதன் பலமாகவே கருதமுடியும்.

ஆம் ஆத்மி என்ற கட்சி `ஊழலுக்கு எதிர்' என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' உள்ளிட்டப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும், இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் ஆம் ஆத்மியின் செல்வாக்கைச் சற்று குறைத்திருக்கலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆம் ஆத்மியின் 'ஊழலுக்கு எதிரான' பிம்பம் பலகீனமாகியிருப்பது அக்கட்சியின் சரிவாகப் பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

1990-களில் பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட டெல்லியில் ஷீலா தீட்ஷித் தலைமையில் தீவிரமாகக் கட்சிப் பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ், 1998-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. அதில், 47.75 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது காங்கிரஸ். தொடர்ந்து 2003-ல், 48.1 சதவிகித வாக்குகளுடன் 47 இடங்களை வென்று இரண்டாம் முறையும், 2008-ல், 40.3 சதவிகித வாக்குகளுடன் 43 இடங்களை வென்று மூன்றாம் முறையும் எனத் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ்.

ஆனால், 2013 தேர்தலில் 24 சதவிகித வாக்குகளுடன் வெறும் 8 இடங்களை மட்டும் பெற்று, அதலபாதாளத்துக்குச் சென்றது காங்கிரஸ். அப்போதுமுதல் இப்போதுவரை இரண்டாம் இடத்துக்குக் கூட காங்கிரஸால் வரமுடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு பலவீனமடைந்ததற்கு முக்கியக் காரணம், அந்தக் கட்சி ஒரு குறிப்பிட்ட முகத்தையே முழுமையாகச் சார்ந்திருப்பதுதான் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தால் அந்தமுகம் பொலிவிழந்துவிட்டாலோ, அல்லது மறைந்துவிட்டாலோ காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமாகிவிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையின் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு சிறப்புத் தலைவரை நியமிக்கிறது.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்

அவருக்கே அந்த மாநிலத்தின் முழுப் பொறுப்பும் வழங்கப்படுகிறது. அதற்குச் சிறந்த உதாரணம் 'வாழ்ந்து கெட்ட குடும்ப கதை'-யாக டெல்லியைக் கூறலாம். ஷீலா தீக்‌ஷித் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள், புகார்கள் எழுந்தபோதெல்லாம், காங்கிரஸ் தலைமை அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸைவிட ஷீலா தீக்‌ஷித்தின் பிம்பம் பெரிதானது. அதனால் 2013-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சியால் தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழல் உருவாகி இன்றும் அதுவே தொடர்கிறது.

மற்றொருபுறம் மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காலகட்டத்தில் (2004-2014) பல்வேறு ஊழல் புகார்களை சந்தித்தது. மத்தியில ஆண்ட காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் புகார்கள் டெல்லியிலும் காங்கிரசுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மத்தியில ஆட்சிக்கு வந்த பாஜக, டெல்லியிலும் தனது கரத்தை வலுவாக்கும் முயற்சியை எடுத்தது. இது காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

டெல்லி 1956-ம் ஆண்டு யூனியன் பிரேதேசமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து 37 ஆண்டுகளுக்கு அதாவது 1993 வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவில்லை. ஆனால், 37 ஆண்டுகளுக்குப் பிறகு 1993-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 42.8 சதவிகித வாக்குகளைப் பெற்று 49 இடங்களை வென்று ஆட்சியில் ஏறியது. 1998 வரை பா.ஜ.க-வின் கோட்டைகளில் ஒன்று டெல்லி எனக் கூறும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியது. 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 32 இடங்களையும், 2015-ம் ஆண்டில் வெறும் 3 இடங்களையும், 2020-ம் ஆண்டு தேர்தலில் 8 இடங்கள் வரைமட்டுமே பெற்று, இப்போதுவரை எழமுடியாமல் திணறுகிறது பா.ஜ.க. டெல்லியில், 1998-க்குப் பிறகு இப்போதுவரை சுமார் 26 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரமுடியாததால், இந்தமுறை ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டுமெனத் தீவிரமாக வேலைசெய்துவருகிறது கட்சித் தலைமை.

மோடி, அமித் ஷா
சிறப்பு மைக்ரோ மேனேஜ்மென்ட் வியூகம்:

இந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றாக வேண்டுமென்ற தீவிரத் திட்டத்துடன் களமிறங்கியிருக்கும் பா.ஜ.க, கடந்த தேர்தலை விட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், குறைந்தபட்சம் 20,000 வாக்குகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு பூத்திலிருந்தும் 50 சதவிகித வாக்குகள் பா.ஜ.க-வுக்கு வரவேண்டுமெனவும் மைக்ரோமேனேஜ்மென்ட் வியூகம் அமைத்திருக்கிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவில் தொடங்கி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள், துணை முதல்வர்கள், அண்டை மாநில நட்சத்திர அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் என இடைவிடாத நட்சத்திரங்களின் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.

பூத்வாரியாக பட்டியல்:

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, ஒவ்வொரு பூத்திலும் வாக்காளர் பட்டியல் தரவுகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, போலி வாக்காளர்களை நீக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர் பட்டியல், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்து, டெல்லிக்குத் திரும்பாதவர்கள், வேலை உள்ளிட்ட பிற காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருக்கும் அனைவரையும் தொடர்பு கொண்டு, பிப்ரவரி 5-ம் தேதி வாக்களிக்க டெல்லிக்குத் திரும்புமாறும், பா.ஜ.க-வுக்கு வாக்களிக்குமாறும் ஊக்குவிக்கிறது.

மேலும், டெல்லியில் வசிக்கும் வாக்காளர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், அந்தப் பகுதி தலைவர்கள், டெல்லியில் வசிக்கும் வேறு மாநில வாக்காளர்களைத் தொடர்புகொண்டு, வாக்கு சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியல்
அண்டை மாநில வாக்காளர்கள்:

உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த டெல்லி வாக்காளர்கள், குறிப்பாக உத்தரகாண்டின் பஹாடி சமூக வாக்காளர்கள் மீது தீவிர கவனம் செலுத்தி, அவர்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது. முன்னாள் எம்.பி ஹரிஷ் திவேதியால் ஒருங்கிணைக்கப்பட்ட அண்டை மாநில வாக்காளர்களுக்கு மத்தியில் பிரசாரம் செய்ய, அந்தந்த மாநில பா.ஜ.க தலைவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய மாநிலங்கள், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் வாக்காளர்களையும் பயன்படுத்திக் கொள்வதில் பா.ஜ.க ஆர்வமாக உள்ளது.

உதாரணமாக, டெல்லியில் சுமார் 3 லட்சம் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, தெலுங்கு தேசத் தலைவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உத்தரகாண்ட, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் அந்தந்த மாநில வாக்காளர்களைச் சந்திப்பதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரசாரம் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மத்திய அமைச்சருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முக்கிய குழு தினமும், வாக்குப்பதிவு முடியும் வரை மத்திய தலைமையுடன் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறது. மேலும், அந்தப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கவும், உடனடியாக முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது.

மோடி - ராகுல் காந்தி

மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் பா.ஜ.க-வும், முந்தையத் தேர்தல்களைவிடக் கூடுதல் வாக்கு சதவீதத்துடன் பலமாக அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் ஆட்சியை இழந்து 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அதேநேரம், ஊழல் ஒழிப்பு கொள்கையுடன் களத்தில் குதித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கைது விவகாரம், எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாகவே கருதப்படுகிறது.

அதுதவிர, பள்ளிகள் வெறும் அலங்கார கட்டடங்களாக இருப்பதாகவும், டெல்லியின் தண்ணீர் பிரச்னைகளையும், மாநிலத்தின் பொருளாதார சிக்கல்கள் குறித்தும் பிரசாரத்தில் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி மீது மக்களுக்கு ஏற்படும் வழமையான சலிப்பு கூட இந்த இரண்டு கட்சிகளுக்கும் பலமாகவே கருதப்படுகிறது.

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையும் அதன் வாக்குறுதிகளும்!
  • பெண்களுக்கு மாதம் ரூ 2,100 வழங்கப்படும்.

  • 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை உறுதி செய்யும் 'சஞ்சீவனி யோஜனா' திட்டம்.

  • குடியிருப்போர் நலச் சங்கங்கள் (ஆர்.டபிள்யூ.ஏ) தங்கள் பகுதிகளுக்குத் தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்த நிதி உதவி.

  • ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்கு ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீடு உட்பட ஐந்து முக்கிய வாக்குறுதிகள்.

  • டெல்லியில் உள்ள குத்தகை தாரர்களுக்கும் இலவச மின்சாரம், தண்ணீர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் (Kejriwal)
பாஜக-வின் தேர்தல் அறிக்கையும் அதன் வாக்குறுதிகளும்:
  • 'மகிளா சம்ரிதி யோஜனா' திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவியாக ரூ.2,500 வழங்கப்படும்.

  • “முதலமைச்சர் மாத்ரித்வா சுரக்ஷா யோஜனா” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூ.21,000 மற்றும் 6 சத்துணவுப் பெட்டிகள் வழங்கப்படும்.

  • ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்த மக்கள் நலன் சார்ந்த அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.500 எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.

  • ஹோலி, தீபாவளி பண்டிகைகளுக்குக் கூடுதல் இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

  • 60 முதல் 70 வயதுடைய தனிநபர்களுக்கான உதவித்தொகை 2,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

  • கணவரை இழந்தோர், ஆதரவற்றோர் உட்பட 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000-மாக உயர்த்தப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் அதன் வாக்குறுதிகளும்:
  • டெல்லி மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.

  • மானிய விலையில் வழங்கப்படும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்.

  • அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், தானியங்கள், தேநீர் ஆகியவற்றுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் இலவச ரேஷன் கிட்கள் வழங்கப்படும்.

  • "பியாரி திதி யோஜ்னா" மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்.

  • டெல்லியில் வசிக்கும் அனைவருக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

  • படித்தும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை ரூ.8,500 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

கெஜ்ரிவால், மோடி, ராகுல் காந்தி

தேசிய அரசியலில் இருக்கும் கட்சிகளும், தேசிய கட்சியாக அங்கிகாரம் பெற்ற கட்சியும் தொடர்ந்து தேர்தல் களத்தில் தீயாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றன. இவர்களில் யார் வெற்றிபெறப் போகிறார்கள்... யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது பிப்ரவரி 8-ம் தேதி தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்!



from India News https://ift.tt/2cnk93T
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்