Header Ads Widget

ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; சிறப்பம்சங்கள் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் அருகே ஜூன் 11 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன், வியாழன்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. 

தமிழக வேளாண்மைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன.

வேளாண் வணிகத் திருவிழா-2023

இந்தக் கண்காட்சியில் விதைப்பு முதல் அறுவடை வரையான வேளாண் கருவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்கள் மற்றம் மதிப்புக்கூட்டல் பொருள்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், வேளாண்மை, கால்நடை, மீன் வளம் குறித்த அரசுத் துறைகளின் அரங்குகளும் இடம் பெற உள்ளன.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொள்ளும் தொழில்நுட்ப கருத்தரங்கும் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

முதல் நாள் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பிற்பகல் 12.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது.

அறிவிப்பு

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்த அரசு அலுவலர்கள் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை சார்பில் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து அரங்குகளில் உள்ள அலுவலர்கள் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். சர்க்கரைத் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் அரங்குகள் இடம் பெற உள்ளன.

கருத்தரங்கு கூடத்தில் இரண்டு நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் உரையாற்ற இருக்கிறார்கள். 11-ம் தேதி முதல் நாளில் மண்வளம் காக்கும் உயிர்ம வேளாண்மை, வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களும், தீர்வுகளும், காலநிலை மாற்றங்களைத் தாங்கவல்ல வேளாண்மை தொழில்நுட்பங்கள் நவீன வேளாண்தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

அறிவிப்பு

12-ம் தேதி இரண்டாம் நாளில் உயர்விளைச்சல் கரும்பும் உன்னத பலன்களும், உழவர்களின் வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள், இடைத்தரகரில்லா வேளாண் சந்தை மின்னணு சந்தைப்படுத்துதல் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புகள்,

வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் நஞ்சில்லா வாழை, கரும்பு, மரவள்ளி மற்றும் மஞ்சள் உற்பத்திக்கான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை நுட்பங்கள், அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைப் பண்ணையம், வேளாண் காடுகள் மற்றும் வனவியல் தொழில்நுட்பங்கள், மகத்துவ மஞ்சள் சாகுபடித் தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல், வளம் தரும் உயர் விளைச்சல் வாழை சாகுபடி, தென்னையில் பூச்சி, நோய் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னையில் மதிப்பு கூட்டுதல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

அறிவிப்பு

பயிர் காப்பீடு, விதை நாற்றுப் பண்ணை உள்ளிட்ட வேளாண் சம்பந்தமான பல்வேறு அரங்குகளும் தொழில்நுட்ப உரைகளும் இடம் பெற உள்ளன. அனுமதி இலவசம்.

இடம்: விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில், பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது வேளாண்மைத் துறை.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்