Header Ads Widget

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றனர்.

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இத்தொடரில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் (ஜூன் 6) ஆர்மீனியா கிராண்ட் மாஸ்டர் ஆராம் ஹகோபியனை அரவிந்த் சிதம்பரமும், மறுமுனையில் ஆர்மீனியாவின் மற்றொரு கிராண்ட் மாஸ்டர் ராபர்ட் ஹோவன்னிசியனை பிரக்ஞானந்தாவும் எதிர்கொண்டனர்.

இதில், இந்திய வீரர்கள் இருவருமே வெற்றிபெறவே, 9 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமாக 6.5 புள்ளிகளைப் பெற்றனர்.

இதனால், சோன்போர்ன்-பெர்கர் டைபிரேக் முறையில் வெற்றியாளரை முடிவுசெய்யும் சூழல் உருவானது.

அதன்படி, முந்தைய சுற்றுகளில் உயர் தரவரிசையிலுள்ள வீரர்களுக்கெதிராக சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அரவிந்த் சிதம்பரம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அரவிந்த் சிதம்பரம்
அரவிந்த் சிதம்பரம்

இந்தத் தொடரில் அரவிந்த் சிதம்பரம் 9 சுற்றுகளில், தோல்வியே காணாமல் 5 சுற்றுகளை டிரா செய்து, 4 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தார்.

குறிப்பாக, டென்மார்க்கின் ஜோனாஸ் புல் பிஜெர்ரேவுக்கு எதிரான 4-வது சுற்றிலும், ஹங்கேரியின் பெஞ்சமின் க்ளெடுராவுக்கு எதிரான 8-வது சுற்றிலும் துல்லியமான நகர்வுகளால் அரவிந்த் சிதம்பரம் வெற்றிபெற்றார்.

அரவிந்த் சிதம்பரம் ஏற்கெனவே இந்த ஆண்டில் ப்ராக் செஸ் விழா மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்