அனைவருக்கும் பசுமை வணக்கம்
“இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான்.
‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது.
2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது.
‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது.
இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல!
ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன.
100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும்.
- ஆசிரியர்
from India News https://ift.tt/0zaTcLp
via IFTTT

0 கருத்துகள்