டெல்லியில் செங்கோட்டை அருகே ஹூண்டாய் ஐ20 கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.
இந்த சூழலில் டெல்லி வெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், "டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இழப்பால் ஆழ்ந்த துயரமடைந்தேன். இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அதே நேரத்தில், ஃபரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்களும் பல AK-47 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த தவறாத நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வலியுறுத்துகிறேன். கடலோரப் பகுதிகளில் சிறப்பு கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும், இதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வலுவான உளவு அமைப்புகள் தேவை." எனக் கூறியுள்ளார்.
வாகன வெடிப்பு குறித்து ஆராய்ந்துவரும் பிரதமர் மோடி, "டெல்லியில் நடந்த வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்தேன்." என சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அமித் ஷா தலைமையில் டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்சா மற்றும் மருத்துவர்கள் குழுவுடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வெடிப்புக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லி வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெல்லியில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியாணா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
from India News https://ift.tt/fEKei9c
via IFTTT

0 கருத்துகள்