தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டம் பல ஏழை, எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், சில பாதைகளில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசல் காரணமாக இத்திட்டத்தின் பயன் சற்றே குறைந்து வருகிறது.
குறிப்பாக, விருதுநகர் முதல் அருப்புக்கோட்டை வரையிலான பாதையில் காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மாணவர்களையும் பொதுப்பயணிகளையும் பெரிதும் சிரமப்படுத்தி வருகிறது.
இலவசப் பேருந்துத் திட்டம் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்துகள் நிரம்பி வழிவதால் பலர் தொங்கிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
சில நிறுத்தங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என்பதும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சில சமயம் கடுமையாக நடந்துகொள்வதும் புகார்களாக எழுந்துள்ளன.
பயணிகளின் குரல்கள்:
ராம் (கல்லூரி மாணவர்): “காலையில் 8 மணிக்கு பேருந்து வந்தாலே உள்ளே இடமே இருக்காது. ஆண் மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது."
தர்ஷினி (பள்ளி மாணவி): "மாலை 5 மணிக்கு பேருந்து ஏறினால் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நிறுத்தங்களில் நிறுத்தவே மாட்டார்கள். நடத்துநர் 'ஏறு, ஏறு' என்று கத்துவார். மிகவும் கஷ்டமாக உள்ளது"
முருகன் (தொழிலாளி): "இலவச பேருந்து என்று எல்லோரும் ஏறுகின்றனர். ஆனால் ஓட்டுநர் கடுமையாகப் பேசுவார். 'உள்ளே போ, இடம் இல்லையென்றால் வெளியே நில்' என்று சொல்வார். அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்"
பாக்கியம் (பூ விற்பவர்): "காலையில் பூக்களுடன் ஏறினால் கூட்டத்தில் இடமே கிடைக்காது. பூக்கள் நசுங்கிவிடும். இதனால் எங்கள் தொழிலில் நட்டம் ஏற்படுகிறது. வயதானவர்களுக்கும் இடம் கிடைப்பதில்லை. இந்த நேரங்களில் பேருந்தில் எப்படி பயணம் செய்வது?"
மகாலட்சுமி (கல்லூரி மாணவி): "பேருந்தில் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிடும். கூட்டம் அதிகமாக இருந்தால் நிறுத்தவே மாட்டார்கள்"
திவ்யா (நோபிள் கல்லூரி மாணவி): "பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனியாக பேருந்து இயக்கினால் நன்றாக இருக்கும்."
டிப்போ மேலாளரின் பதில்:
இதுகுறித்து விருதுநகர் டிப்போ மேலாளரிடம் பேசியபோது, அவர் பின்வருமாறு கூறினார். "எங்கள் பேருந்துகள் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படுகின்றன. எனவே, மாணவர்கள் இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று அறிவுறுத்த உள்ளோம்.
மேலும், பள்ளி மாணவர்களுக்குத் தனியாக பேருந்துகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் திட்டமிடல்களும் அரசு சார்பில் தற்போது நடைபெற்று வருகின்றன.
கல்லூரி மாணவர்களுக்குத் தனியாக பேருந்து வழங்குவதற்கு இன்னும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், வரும் ஆண்டுகளில் முடிந்தால் அதனையும் பரிசீலனை செய்யலாம்"
தீர்வுகள்:
இப்பிரச்னைக்குத் தீர்வாக, நெருக்கடி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதும், ஓட்டுநர்கள் - நடத்துநர்களுக்கு பயணிகளுடன் மென்மையாக நடந்துகொள்ள பயிற்சி அளிப்பதும், அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை நிறுத்த உறுதி செய்வதும் அவசியம்.
இவை அமலானால், இலவச பேருந்து திட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும். பள்ளி மாணவர்களுக்கான தனிப் பேருந்து வசதி விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
from India News https://ift.tt/5CAb0cR
via IFTTT

0 கருத்துகள்