Header Ads Widget

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கலாமா?

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், சளி பிடிக்குமா, காய்ச்சல் வருமா...  சிலருக்கு மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது ஒன்றும் ஆவதில்லை. அதுவே, குளிர்காலத்தில் தலைக்குக் குளித்தால் மட்டும் உடனே, சளி, இருமல், காய்ச்சல் வருவதைப் பார்க்கிறோம்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

ஏற்கெனவே வழக்கமாக எண்ணெய்க் குளியல் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்றால், அவர்கள் குளிர்காலத்திலும் தாராளமாக அதனைத் தொடரலாம். பனி அதிகமாக இருக்கும் சூழலில், அதிகாலை வேளையைத் தவிர்த்து, சூரியன் உதித்து,  வெயில் வந்த பிறகு எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது.

அதுவே, அடிக்கடி எண்ணெய்க் குளியல் எடுத்துப் பழக்கமில்லை, புதிதாக அந்தப் பழக்கத்தைத்   தொடங்கப் போகிறீர்கள் என்றால், குளிர்காலத்தைத் தவிர்த்துவிட்டு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது அதைத் தொடங்குவது  பாதுகாப்பானது. ஏனெனில், எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் பயந்துபோய் அந்தப் பழக்கத்தையே நீங்கள் கைவிட நேரிடலாம்.

எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

குளிர்காலத்திற்கு உகந்த சுக்குத் தைலம், கப நோய்களுக்கான நொச்சித் தைலம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். வீட்டில் எண்ணெய் தயாரிக்கும் போது, அதில் ஒரு துண்டு சுக்கு, பூண்டு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முன் மிளகுத்தூள் அல்லது சித்த மருத்துவத்திலுள்ள தாளிசாதி சூரணத்தை உச்சந்தலையில் தேய்த்துக் குளித்தால், கபம் (சளி) சேருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
சுருக்கமாகச் சொல்வதானால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம். ஒருவேளை சளி பிடித்தால், சில வாரங்கள் இடைவெளிவிட்டு, பிறகு மீண்டும் தொடரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்