கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் வாசல் முன்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் ஒன்றில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/6a83e234-7a83-4d5f-b0e7-11b47891f7a6/WhatsApp_Image_2022_10_23_at_13_01_23.jpeg)
அப்பகுதியில் தடயவியல் அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், வெடிக்காத ஒரு எரிவாயு சிலிண்டர், பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தை டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதி, மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் வெடி விபத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 6 தனிப் படைகள் அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/ebdceec5-6a11-4471-b71c-736e73761ca9/WhatsApp_Image_2022_10_23_at_19_34_23.jpeg)
காரில் வந்தவரின் உடல் முழுவதும் கருகியதால் அவர் யார் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், ``காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 தனிப் படைகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/cc305f21-9835-42a3-8314-cdb944031ffd/WhatsApp_Image_2022_10_23_at_20_22_04.jpeg)
அதில், உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம்.நகர் கோட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேசா முபின்(29) என்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்து ஆணிகள், கோலிக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைப்பற்ற மற்ற பொருள்கள் குறித்து தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜமேசா முபினின் வீட்டை சோதனையிட்டதில், பொட்டாசியம் நைட்ரேட், அலுமனியம் பெளடர், மரக்கரிகள், சல்பர் போன்று நாட்டு வெடிகுண்டைத் தயார் செய்யக் கூடிய மூலப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/3a6c3d48-b9f8-4fc9-8d79-43a2465cd6a0/WhatsApp_Image_2022_10_23_at_14_41_32.jpeg)
இவர் மீது வழக்குள் ஏதும் இல்லை. கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காவலர்கள் ரோந்துப் பணியில் இருந்ததால், ஜமேசா மூபினால் அப்பகுதியைக் கடக்க முடியவில்லை. அப்போது, வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம். இதை எங்கு கொண்டு செல்ல திட்டமிட்டார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள், காரில் உள்ள பொருள்களை வைத்து பார்க்கும்போது, எதிர்காலத்தில் வெடி விபத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம். இதுதொடர்பான தகவல்கள் அடுத்த கட்ட விசாரணையில்தான் தெரியவரும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/af450f7a-ea41-424b-b9d0-be6f03afd19d/WhatsApp_Image_2022_10_23_at_14_41_34.jpeg)
ஜமேசா மூபினுடன் தொடர்பில் இருந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பொருத்தவரை இதை முதலில் வாங்கியவருக்கும் தற்போது காரை பயன்படுத்தியவருக்கும் இடையே 10 பேர் உள்ளனர். அந்த 10-ஆவது நபர்தான் ஜமேசா மூபினுக்கு காரை கொடுத்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்துக்குள் காரை யார் ஓட்டி வந்தார், சிலிண்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் முன்னேற்றம் இருப்பதால், தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றார்.
from Latest News
0 கருத்துகள்