`மதுஸ்ரீ பாடிய ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது' பாடல்... ஹிட் ஆன அளவுக்கு விமர்சன ஹிட்டுக்கும் உள்ளாகி இருக்கிறது. கணவனை நினைத்து உருகும் மனைவி பிரிவுத் துயரில் பாடுவதாக அமைந்திருக்கும் அந்தப் பாடல் வரிகளின் கவித்துவம், பாடலைக் கேட்பவர்களுக்கு பாதி கூட சென்று சேரவில்லை. “பாடலுக்குத் தேவையான நயத்தை தன் குரலால் கொடுத்த மதுஶ்ரீ, தமிழ் உச்சரிப்பில் சொதப்பியதால் வந்த வினை இது” என்று ரஹ்மான் ரசிகர்கள் சிலரே வருத்தப்படுகிறார்கள். ரசிகர்களுக்கு இருக்கும் அதே வருத்தம், ரஹ்மானுக்கும் இருப்பது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற டைம்லர் இந்தியாவின் ‘பாரத் பென்ஸ்' நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/9c683929-047b-45ea-b9d7-567ee1ba6d51/Untitled_1.jpg)
சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைந்திருக்கும் இந்த டிரக் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனம், இந்தியாவில் கால் பதித்து பத்து ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதையொட்டி தன் ஊழியர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சி அது.
இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்றாலும், பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள்தான் பாடப்பட்டன. ‘சிங்கப் பெண்ணே’, ‘பொன்னி நதி பார்க் கணுமே’ பாடல்களுக்கு இணையாக, ‘முக்காபுலா’, ‘உயிரே... உயிரே’, ‘நெஞ்சினிலே..’. என்று ரஹ்மானின் எவர்கிரீன் பாடல்களும் கைத்தட்டல் பெற்றன. ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது' பாடலை `மதுஸ்ரீ பாடி முடித்தபோது ரஹ்மான் அவரைப் பார்த்து, ‘‘என்கூட 15 வருஷமா பாடிட்டு இருக்கீங்க, எப்ப தமிழ் கத்துக்கப் போறீங்க?'' என்று மெல்லிய புன்னகையோடு கேட்க, பதறிவிட்டார் `மதுஸ்ரீ. ‘‘தமிழ் கத்துக்கறேன் சார்...'' என்று அவர் சொல்ல, ‘‘சீக்கிரமா கத்துக்குங்க. தமிழைக் கொலை பண்ணாதீங்க'' என்று அட்வைஸ் செய்தார் ரஹ்மான்.
from Latest News
0 கருத்துகள்