Header Ads Widget

'கல்விக்கொள்கையில் சண்டையிடும் மத்திய, மாநில அரசுகள்' - வேதனையில் கல்வியாளர்கள்

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அப்போது, ``பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல், கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவுகிறது. மாணவர்களிடத்தில் 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துகிறது. 

அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைக்கிறது. சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையிலும், 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்கள்

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மாநிலத்திற்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதாகவும் அறிவித்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து ஆணையிட்டுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டார். 

அப்போது அவர் அளித்த பேட்டியில், ``தமிழக அரசும், மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றியே வருகிறது. தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். 12 மாநில மொழிகளில் பொறியியலுக்கான கேள்வி தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். 

தமிழக அரசு

இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் 2020-21ம் ஆண்டில் இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளது கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அதில், '44.85% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட 34% இணைய இணைப்பு பெறப்பட்டு இருக்கிறது. 

மேலும் 2020-21ல் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22ல் 14.89 லட்சமாக இருந்தது. தனியார் மற்றும் பிற நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படுவதால் மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. 2021-22ம் ஆண்டில், தொடக்கநிலை முதல் மேல்நிலை வரை பள்ளிக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை சுமார் 25.57 கோடியாக இருந்தது. இது 2020-21ம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையுடன் ஒப்பிடும்போது 19.36 லட்சம் அதிகமாகும். 

இணையம்

2020-21 உடன் ஒப்பிடும்போது 2021-22 இல் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 1.95% குறைந்துள்ளது.  2020-21ல் 97.87 லட்சமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை இருந்தது. இது 2021-22ல் 95.07 லட்சமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 2021-22ல் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் 0.9%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.45%, தனியார் பள்ளிகளில் 2.94% மற்றும் பிற பள்ளிகளில் 8.3% ஆகக் குறைந்துள்ளது' என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது. 

ஒருபுறம் தேசிய கல்வி கொள்கையே அமல் படுத்துவோம் என மத்திய அரசும், மாநில கல்வி கொள்கை அமல்படுத்துவோம் என மாநில அரசும் சண்டையிட்டு வருகிறது. மறுபுறம் இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்குனரகம்

இதுகுறித்து பொது கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம் பேசுகையில், "நிதி ஆயோக்கின் பரிந்துரையின்படி தான் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ அல்லது ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ, அந்த பள்ளிகளை மற்ற புள்ளிகளுடன் இணைத்து விடுங்கள் என்று சொல்கிறது. 

நிதி ஆயோக் உருவானதால் இருந்து இதை தான் செய்து கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவு தான், இது. ஏழைகள் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம், கட்டணம் இல்லாமல் அரசை பள்ளிக்கூடம் நடத்த சொல்கிறது.  இதற்கு எதிராக நிதி ஆயோக் கொடுத்த பரிந்துரையின்படி  மூடப்பட்டுள்ளது. 

நிதி ஆயோக்

மேலும் அரசின் பொருளாதாரம் வளர வளர கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் கொடுக்கவில்லை. இதனால் தான் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. அரசு பள்ளிகளை திட்டமிட்டு குறைத்து வருகிறார்கள். இது மக்களுக்கு ஏற்புடையது இல்லை. 

இந்த 20,000 பள்ளிகள் மூடுவது என்பது கவலைக்குறிய விஷயம். இத்துடன் நிற்கப்போவது இல்லை. இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையும் இவ்வாறு பலவீனமாக இருக்கக்கூடிய பள்ளிகளை மூட சொல்கிறது. மேலும் அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுடன் இணைத்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். எனவே இதனை விடுத்து கல்வியை பிற மேலை நாடுகளை போல் இலவசமாக வழங்க வேண்டும். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் மேம்பட்டுத்தான் வருகிறது" என்றார். 



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்