Header Ads Widget

Doctor Vikatan: கெமிக்கல் கலந்த ஹேர் டை, மூலிகை ஹேர் டை.... இரண்டில் எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: என் வயது 32. தலையில் நிறைய நரை முடிகள் தென்படுகின்றன. கெமிக்கல் டை உபயோகிப்பது, மூலிகை டை உபயோகிப்பது இரண்டில் எது சரி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

ஹேர் டை பயன்படுத்த ஆரம்பிக்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உங்களுடைய வயது மற்றும் உடல்நல பாதிப்புகள். மிக இளவயதில் டை உபயோகிப்பதைக் கூடியவரையில் தவிர்த்துவிடுவது சிறந்தது.

உங்களுக்கு ஆஸ்துமாவோ, மூச்சுத்திணறலோ, வீஸிங் பிரச்னையோ இருக்கலாம். சிலருக்கு தும்மல் பிரச்னை இருக்கும். வாசனை ஏற்றுக்கொள்ளாது. இந்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ஹேர் டை ஏற்றுக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கலாம்.

அடுத்து நீங்கள் யோசிக்கவேண்டியது, கெமிக்கல் கலந்த டையா, பாதி கெமிக்கல் கலந்ததா, இயற்கையான டையா என்பது. இயற்கையான டை என்றாலும் அது எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. வீஸிங், தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த வகை டை அதிக பாதிப்பைக் கொடுக்கலாம். அவர்களுக்கு டை உபயோகித்ததும் இருமல் அதிகரிக்கும். தூங்கும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நேரம் அதை வைத்திருந்துவிட்டு கூந்தலை அலசிவிடுவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. அதுவே இயற்கையானதென நினைத்து உபயோகிக்கும் மருதாணி பெரிய அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே இயற்கையான டையாக இருந்தாலும் 'வைர ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது' என்பது போலதான் அதை அணுக வேண்டும்.

Hair Dye

சிலருக்கு மண்டைப் பகுதியின் தொடக்கத்திலுள்ள முடிகள் டை செய்த அடுத்த நான்கைந்து நாள்களிலேயே நரைக்கத் தொடங்கிவிடும். அதை ரீடச் செய்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் உபயோகிக்கும் டை தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் தலையில் வெட்டுக்காயமோ, கட்டியோ, புணணோ இருந்தால் கெமிக்கல் டையில் உள்ள ரசாயனங்கள் அவற்றின் வழியே உடலுக்குள் ஊடுருவ வாய்ப்பு உண்டு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்