மதுரை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும், சேதமான சாலைகளாலும் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களாலும் மழை காலத்தில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2-வது வார்டிலுள்ள அசோக்நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது.
நேற்று காலை 11 மணி அளவில் 5 ஊழியர்களுடன் வேலை நடந்து கொண்டிருந்தபோது, சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழமுள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு சக்திவேலும் மற்றொரு தொழிலாளியும் இடுப்பளவு மணலுக்குள் சிக்கிக் கொண்டனர். அதில் சக தொழிலாளி போராடி வெளியில் வந்த நிலையில், சக்திவேல் இடுப்பு வரை மூடியிருந்த மண்ணை அகற்ற முயன்றுள்ளார். அந்த நேரம் அருகிலிருந்த பெரிய அளவிலான குடிநீர குழாய் உடைந்து தண்ணீர் பள்ளத்திற்குள் புகுந்தது. இதனால் மணலுக்குள் சிக்கியிருந்த சக்திவேலின் உடல் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியது.
தீயணைப்புத்துறையினர் வந்து இயந்திரம் மூலமாக தண்ணீரை வெளியேற்ற ஆரம்பித்தனர். அப்படியும் சக்திவேலின் உடலை மீட்க முடியவில்லை. 4 மணி நேர போராட்டத்திற்குப்பின் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொத்துக்காடை சேர்ந்த சக்திவேலுக்கு திருமணமாகி மகள். மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு விளாங்குடி பகுதியில் இதே போன்று பாதாளசாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.
கடந்த மாதம் 20-ம் தேதி கூடல்நகர் சொக்கலிங்க நகரில் நடந்து சென்ற ரமேஷ் என்பவர் மாநகராட்சியால் தோண்டப்பட்டிருந்த பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து பலியானார். ஆனால், அதற்கு தோண்டப்பட்ட பள்ளம் காரணம் அல்ல என்று மாநகராட்சி நிர்வாகம் மறுத்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், "சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றாமல் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
from Latest News

0 கருத்துகள்