ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பவர் பிரசாத். இவருடைய மனைவி 13 ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவருடன் வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறார். இவரின் மூத்த மகளும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். அதனால் பிரசாத் தன் 16 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தன் இளைய மகளை, தான் பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டதாக பிரசாத் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். போலீஸாரும் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். இந்தக் கொலை சம்பவம் குறித்தும் பேசும் போலீஸார், ``ஆம்புலன்ஸ் டிரைவரான பிரசாத், தன் மகள் கேட்டவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை படிக்கவைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சிறுமி பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நபருடன் பேச வேண்டாம் என்று எச்சரித்தும் சிறுமி கேட்கவில்லை எனத் தெரிகிறது. அதனால் ஆத்திரத்தில் பிரசாத், தன் மகளைக் கொலைசெய்திருக்கிறார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் நடந்திருக்கிறது. அதன்பிறகு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவுசெய்திருக்கிறார். ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பிரசாத் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தனர்.
from Latest News

0 கருத்துகள்