Header Ads Widget

Doctor Vikatan: அடிக்கடி நகச்சுற்று பாதிப்பு... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி நகச்சுற்று வருகிறது. இதற்கு என்ன காரணம்? வராமல் தடுக்க முடியுமா? வேறு என்ன சிகிச்சைகள் தேவைப்படும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

டாக்டர் செல்வி ராஜேந்திரன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு `பாரோநைக்கியா' (Paronychia) என்று பெயர். அதாவது நகங்களில் ஏற்படும் ஒருவகையான அழற்சி பாதிப்பு இது. நகங்களில் ஏற்படும் திடீர் புற அதிர்ச்சி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.

இந்த பாதிப்பானது கை மற்றும் கால் விரல் நகங்களில் வரலாம். இதன் தீவிரமானது கடுமையாகவோ, நாள்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். முதல் வகை பாதிப்பானது திடீரென நகங்களைச் சுற்றி ஏற்படும் பாதிப்பு. 6 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் நாள்பட்ட பாதிப்பாக கணக்கிடப்படும்.

நகங்களைச் சுற்றியுள்ள சருமத்தில் லேசான கீறலோ, வெட்டோ இருக்கும்போது அதன் வழியே பாக்டீரியா கிருமி உள்புகுந்து பெருகுவதால்தான் பாதிப்பு தீவிரமாகிறது. நகங்களின் அடிப்பாகத்தில் உள்ள பகுதிக்கு 'கியூட்டிகிள்' என்று பெயர். அந்த இடத்திலோ அல்லது நகமும் சதையும் இணையும் இடத்திலோ தொற்று ஏற்பட்டால் இந்த பாதிப்பு வரலாம்.

நகம் பராமரிப்பு

இந்த பாதிப்புக்கு காரணம் 'ஸ்டெஃபைலோகாக்கஸ் ஏரியஸ்'

( Staphylococcus aureus) என்ற பாக்டீரியா. சருமத்தில் ஏற்படும் காயம், சருமத்தின் உள்பகுதியிலிருந்து வளரும் நகம், எங்கேயாவது திடீரென இடித்துக்கொள்வதால் ஏற்படும் அதிர்ச்சி, அடிக்கடி மெனிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வது, கடுமையான டிடெர்ஜென்ட் போன்றவற்றைத் தொட்டுக்கொண்டே இருப்பது, நகங்களைக் கடிக்கும் பழக்கம், அடிக்கடி தண்ணீரில் கைவைப்பது, நீரிழிவு போன்றவை இதற்கான காரணங்கள்.

நகங்களில் வலி, வீக்கம், தொட்டால் வலி அதிகரிப்பது, நகத்தைச் சுற்றி சீழ்வைப்பது போன்றவை இதன் அறிகுறிகள். கவனிக்காமல் விட்டால் நகம் அசாதாரணமாகவும் நிறம் மாறியும் வளர வாய்ப்புகள் உண்டு. நகங்களில் கோடுகள் விழலாம், வறண்டு போகலாம், ஒரு கட்டத்தில் நகமே விழவும் வாய்ப்புகள் உண்டு.

மருத்துவரை அணுகி, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். நகத்தைச் சுற்றி சேர்ந்துள்ள சீழை அகற்ற வேண்டும். அடிக்கடி இந்த பாதிப்புக்குள்ளாகிறவர்களுக்கு அந்த சீழை கல்ச்சர் டெஸ்ட் செய்துபார்த்து, எந்தவகையான பாக்டீரியாவால் வருகிறது என்றும் கண்டுபிடிக்கலாம்.

நகம் கடித்தல்

நகங்களைக் கடிப்பதைத் தவிர்ப்பது, நகங்களை வெட்டும்போது மிகவும் நெருக்கமாக வைத்து வெட்டாமலிருப்பது, கியூட்டிகிள் பகுதியை நீக்காமலிருப்பது, கெமிக்கல் மற்றும் டிடெர்ஜென்ட் உபயோகிப்பவர்கள், கைகளுக்கு கிளவுஸ் அணிந்து வேலை செய்வது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். கைகள் வறண்டு போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறவர்கள், நீரிழிவு இருக்கிறதா என டெஸ்ட் செய்து பார்த்து அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்