புதுக்கோட்டை நெல்லுமண்டித் தெருவில், அதிமுக ஓ.பி.எஸ் அணியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மாவட்ட அலுவலகம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். அதனை இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அ.தி.மு.க தமிழகத்தில் நூற்றாண்டு காலம் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நோக்கி தான் அ.தி.மு.க பயணிக்கிறது. ஓபிஎஸ்-ன் கருத்துடன் ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு! ஒற்றுமை நீங்கினால், அனைவரின் தாழ்வு! என்ற நிலையில் தான் இருக்கிறார். இந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக தெரியவில்லை.

நாங்கள் விரும்புவது எல்லாம் ஜெயலலிதாவின் எண்ணத்தின்படியும், எம்.ஜி.ஆரின் எண்ணத்தின் படியும் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட்டு கட்சியை, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களது எண்ணம். ஓ.பி. எஸ், சசிகலா, டி.டி.வி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்ற பண்ருட்டியார், சைதை துரைசாமி, ஏ.சி சண்முகம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பமும் கூட. ஒன்றிணைய மாட்டோம் என, சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து, தனது கருத்தைக் கூறி வருகிறார். சில முன்னாள் அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரது ஒற்றுமைக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.
ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவருக்கு என்ன அதிகாரமோ, அதன்படி தான் செயல்படுகிறார். அப்படி நடக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையில் இரட்டை இலை சின்னம் கட்டாயம் எங்களுக்கு கிடைக்கும். தி.மு.க எங்களை இயக்குவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. நிச்சயமாக எங்களை திமுக இயக்கவில்லை, அதற்கு நாங்கள் ஆட்படமாட்டோம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, எய்ம்ஸ் உள்ளிட்ட பெரிய பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் வந்தார்கள். ஆறுமுகசாமி ஆணையம் சொன்னது தான், உண்மை என்று கூறி விட முடியாது. அது பின்னே மாறலாம். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆணையம் கருத்து சொல்லி உள்ளது.

அதற்கு, அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பி.எஸ் கூறியுள்ளார். இதில் உண்மையான நிலவரம் என்னவென்றால் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்துள்ளனர். அவர்களை விட இந்தியாவில், சிறந்த மருத்துவர்கள் கிடையாது. அவர்கள் கருத்தை கேட்டால் தான், என்ன உண்மை என்று தெரியும். கூடிய சீக்கிரம் பொதுக்குழு இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அது விரைவிலேயே நடக்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க தலைமையில் தான், அ.தி.மு.க தேர்தலைச் சந்திக்கும். 40 இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்." என்றார்.
from Latest News

0 கருத்துகள்