Header Ads Widget

Doctor Vikatan: இரு வருடங்களாகத் தொடரும் மாஸ்க் அணியும் பழக்கம்... நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்குமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, ஜுரம் என ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டிருக்கும். ஆனால், கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அந்தப் பிரச்னை கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விடாமல் மாஸ்க் அணிந்து வருகிறேன். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமா? தொடர்ந்து மாஸ்க் அணிவது சரியா தவறா? அப்படி அணிந்து வந்தால் இம்யூனிட்டி பவர் குறையும் என்கிறார்களே?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

ஒருவருக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை பாதிக்க பல காரணங்கள் இருக்கலாம். கோவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அதிலிருந்து குணமான சில நாள்கள், மாதங்கள் வரை மீண்டும் சளி, காய்ச்சல் வராமலிருப்பதைப் பார்க்கிறோம். கோவிட் தொற்று ஏற்படுத்திய எதிர்ப்பாற்றலே அதற்கு காரணம்.

முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் அடிக்கடி சளி, இருமல் பாதிப்புக்கு உள்ளாவது சகஜம். பொது இடங்களுக்குச் செல்வது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் கிருமித் தொற்றுகளுக்கு அவர்கள் எளிதில் இலக்காவார்கள்.

நீரிழிவு உள்ளவர்கள், குழந்தைகள், ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்கள் போன்றோருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இவர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைப் பார்க்கலாம். குறிப்பாக இவர்களை ஃப்ளு வைரஸ் தொற்று எளிதில் தாக்கும்.

சைனஸ் பாதிப்புள்ளவர்கள் அடிக்கடி சளி, இருமல் பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். யாராக இருந்தாலும் இப்படி அடிக்கடி சளி, இருமல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொது மருத்துவரையோ, தொற்றுநோய் சிகிச்சை மருத்துவரையோ அணுகி, காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இது சாதாரண சளி பாதிப்பா அல்லது நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் வேறு ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து அதற்கேற்ப சிகிச்சைகளை எடுக்கலாம்.

மாஸ்க் எனும் முகக்கவசம் அணிவது மிகவும் நல்ல பழக்கம். கோவிட் காலத்தில்தான் நாம் அதற்குப் பழகினோம் என்றாலும் பொதுவாகவே அந்தப் பழக்கம் பிற தொற்றுகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கும். இன்றைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழல் மாசிலிருந்தும் அது நம்மைப் பாதுகாக்கும்.

mask

வெளியிடங்களுக்குப் பயணம் செய்கிறவர்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர், கூட்டமான இடங்களில் அதிக நேரம் செலவிடுவோர், அடிக்கடி தியேட்டர் போன்ற இடங்களுக்குச் செல்வோர் ஆகியோர் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மாஸ்க் அணியும் பழக்கம்தான் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மாஸ்க் அணிவதால் தொற்று பாதிப்பிலிருந்து நீங்கள் மீட்கப்படுவீர்களே தவிர, அதற்குப் பழகுவதால் உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் எந்த வகையிலும் குறையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்