Header Ads Widget

திருச்சி: `47 லட்சம் ரொக்கம், 118 பவுன் தங்கம்’ - போலீஸில் சிக்கிய மெகா கொள்ளையன்

திருச்சி திருவெறும்பூர் ஐஏஎஸ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். தொழிலதிபரான இவர் கிரஷர்கள், தனியார் பஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன் போன்ற தொழில்களைச் செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 92 பவுன் தங்கம், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், வெள்ளி போன்றவற்றோடு லட்சக்கணக்கில் பணமும் கொள்ளை போனது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளைச் சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க, 3 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை

இந்நிலையில், போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திருவையாறு புது அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த செல்வகார்த்தி என்ற இளைஞர் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார். அவரை தனி இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை செய்ததில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதையடுத்து அவரிடமிருந்து 47.20 லட்ச ரூபாய் ரொக்கம், 118 பவுன் தங்க நகைகள், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாட்டின நகைகள், 1.50 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகைகள், 2 லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

செல்வகார்த்தி மீது திருவெறும்பூர், நவல்பட்டு, திருவையாறு, கும்பகோணம் போன்ற பல போலீஸ்  ஸ்டேஷன்களில் கொள்ளை வழக்குகள் இருக்கின்றனவாம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் சிறைக்குச் சென்ற செல்வகார்த்தி, சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த அடுத்த சில நாள்களிலேயே திருவெறும்பூரில் இந்த கொள்ளைச் சம்பவத்தை அவர் அரங்கேற்றியதோடு, மீண்டும் போலீஸில் சிக்கியிருக்கிறார்.

கொள்ளையன் செல்வகார்த்தி

இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சந்தேகங்கள் இருந்தது. அதில் முக்கியமாக, கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தகவல் வெளியானது பல சந்தேகங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்