விழுப்புரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவருக்கு சொந்தமாக சாலாமேடு பகுதியில் 2.5 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக அப்பகுதியில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளுக்காக இவரின் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. ஆனால், அந்த இடத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், உரிய விலை அளிக்கப்படவில்லையாம். எனவே, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2002-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
2006-ம் ஆண்டு, குறிப்பிட்ட தொகையை வழங்கும்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்கு தடை கோரியது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். ஆனால், தடை வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், சதுரடிக்கு 15 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை அவருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.
எனவே, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில், 31.01.2023 அன்று அரசு நீதிமன்ற அலுவலர் மற்றும் தமது வழக்கறிஞர்களுடன், விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த ஷேக்காதர் அலி, அந்த அலுவலகத்திற்கு சொந்தமான பீரோ, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்தார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
from Latest News

0 கருத்துகள்