Header Ads Widget

சட்டமன்ற இருக்கை விவகாரம் - சபாநாயகர் அப்பாவு செய்வது சரியா?! | அலசல்

தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை அ.தி.மு.க பொது செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுவிட்ட பின்னரும், அவர்களை அதிமுக எம்.எல்.ஏ-வாக கருதுவது ஏன் என சபாநாயகர் அப்பாவு-விடம் எடப்பாடி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ``இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது. அதை எதிர்க்கட்சித் தலைவர் கேட்க முடியாது" என்றார்.

அமளியான சட்டமன்றம்

இதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொடர் அமளியில் ஈடுபடவே, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. அவையிலிருந்து வெளியேறிய பின் செய்தியாளர்களிடம்., " சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் குறித்தும், அ.தி.மு.க-விலிருந்து மூன்று எம்.எல்.ஏ-க்கள் நீக்கப்பட்டது குறித்தும் 10 முறை சபாநாயகர் அறையில் கடிதம் கொடுத்திருக்கிறோம். 10 முறை கடிதம் கொடுத்தும், நாங்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். அவர் தனது மரபைக் கடைப்பிடிக்கவில்லை. காலம் காலமாக எதிர்க்கட்சித் தலைவர் அருகில்தான் துணைத் தலைவர் அமரவைக்கப்படுகிறார். மற்ற உறுப்பினர்கள் சபாநாயகர் விருப்பப்படி அமரவைக்கப்படுவார்கள். அதில் நாங்கள் குறுக்கிடவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மரபுப்படி நியமிக்கப்படவில்லை. எல்லாவற்றையுமே அவர் நிராகரிக்கிறார். சபாநாயகரின் புனிதமான இருக்கையில் அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்." என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

உண்மையில் இருக்கை தொடர்பான விவகாரத்தில் என்ன நடக்கிறதென்று அ.தி.மு.க சீனியர் எம்.எல்.ஏ-க்களிடம் பேசினோம். " ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பிறகு எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ்-ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். அதுமட்டுமல்லாது, அவருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை கட்சித் தலைமை நியமனம் செய்ததோடு, அதற்கான ஒப்புதலை அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பெற்று கடிதமாக சபாநாயகரிடம் கொடுத்து இருக்கிறோம்.

சபாநாயகர் அப்பாவு

சட்டப்படி என்றாலும் மரபுப்படி என்றாலும், எங்களின் கோரிக்கையை ஏற்று, ஓ.பி.எஸ்-ஸின் இருக்கையை மாற்றியிருக்கவேண்டும். இருக்கை விவகாரம் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டாலும், நாங்கள் துணைத் தலைவர் என்ற இருக்கையை மட்டும்தான் மாற்ற சொல்கிறோம். மற்றப்படி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் இருக்கை நாங்கள் மாற்ற சொல்லவில்லையே?! அதனால்தான் சபாநாயகர் நடுநிலைமையோடு நடந்துக் கொள்ளவேண்டும் என்று எடப்பாடி கூறுகிறார். இருக்கை விவகாரத்தில் இவ்வளவுநாள் ஏதாவது ஒரு கருத்தை சொல்லிவந்த அப்பாவு, இப்போது பாயிண்ட் இல்லாததால் அதிமுக எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றி இருக்கிறார். " என்றனர்.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "அதிமுகவின் பொதுக்குழு மூலமாக நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையை சபாநாயகர் செய்கிறார். இது கண்டனத்துக்கு உரியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, எங்கள் பொதுச் செயலாளர் அருகே உட்காரவைக்க கூடாது. ஒரு முன்னாள் முதல்வர் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார் அப்பாவு.

ஜெயக்குமார்

அப்படியென்றால், தன் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இடம் ஒதுக்கீடு செய்வாரா? சட்டமன்ற சபாநாயகர் என்பவர் எல்லாருக்கும் பொதுவானராக இருக்கவேண்டும். ஆனால், அவர் நடுநிலையோடு செயலபடவில்லை. அதற்கு இருக்கை விவகாரம் ஒன்றே போதுமானது." என்றார் காட்டமாக.

தொடர்ந்து தி.மு.க தரப்பில் கேட்க முயற்சிக்கும்போது, "அவைக்குள் நடக்கும் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. சட்டத்தின்படி, சபையின் மரபுப்படி சரியான முடிவைதான் சபாநாயகர் எடுக்கிறார். அதை முதல்வரால்கூட கேள்வி எழுப்பமுடியாது. மக்களின் பிரச்னை குறித்து அவையில் பேசமுடியாத அ.தி.மு.க-வினர் தங்களின் பங்காளி சண்டை போட்டுக் கொண்டு, அவையின் நேரத்தைத்தான் வீணடிக்கிறார்கள்" என்கின்றனர்.

ஜெகதீஸ்வரன்

இதுகுறித்து அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டபோது, " அ.தி.மு.க-வில் குழப்பம் இருந்தால் அவையில் அதை கொண்டு வரக்கூடாதென்று சபாநாயகர் அப்பாவு நினைக்கிறார். அதன்படிதான், ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக செயல்படுகிறோரோ என்ற எண்ணம் வராமல் இல்லை. முன்பிருந்த தனபால், ஜெயக்குமார் என எல்லா சபாநாயகர்களும், அவர்களின் கட்சி சார்ந்தே முடிவை எடுத்து வந்தனர். அதன்படிதான், அப்பாவு தி.மு.க சபாநாயகராவே நடந்து கொள்கிறார். இந்த இருக்கை விவகாரத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்தாலும், அவை விவகாரத்துக்குள் நீதிமன்றத்தால் தலையிடமுடியாது. இந்த குழப்பமான சூழ்நிலையில்தான், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தொடரும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்