`பா.ஜ.க-வுக்கு எதிராக நாங்கள் ஒரே ஒருத்தர்தான் இருக்கிறோம். எங்களைவிட்டால் பா.ஜ.க-வை வீழ்த்த உங்களுக்கு வேறு வழி ஏது... ஆக கொடுக்குற சீட்டை வாங்கிக்கோங்க' என கெத்து ஆட்டிட்யூட் காட்டிக்கொண்டே கடந்த தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கறாராக சீட்டுகளை ஒதுக்கியது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் `பா.ஜ.க எதிர்ப்பு' என்ற ஒற்றைப்புள்ளியில் தி.மு.க-வுடன் முரண்டுபிடிக்க முடியாமல் சமரசம் ஆகிக்கொண்டன. கடந்த இரண்டு ஆண்டு தி.மு.க ஆட்சியில் பல்வேறு சம்பவங்கள், தி.மு.க-வின் பல்வேறு செயல்பாடுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தினாலும், கூட்டணி தர்மத்துக்காக அறிக்கையளவு எதிர்ப்போடு நின்றுகொண்டு அடக்கி வாசித்தன.
ஆனால், தற்போது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி பிளவால், இனிமேல் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் அப்படி அடங்கி ஒடுங்கி அமைதியாக இருக்குமா இல்லை... `இருக்கவே இருக்கு `பா.ஜ.க இல்லாத அ.தி.மு.க கூட்டணி... அங்கே போகட்டுமா?’ என ஆப்ஷன் காட்டுமா என்பதே எல்லோரும் எதிர்பாத்து நிற்கும் கேள்வி!
வலைவிரிக்கும் அ.தி.மு.க., வரவேற்கும் வி.சி.க:
அதற்கேற்றாற்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், ``நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளெல்லாம், கண்டிப்பாக கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வுடன் சேர வாய்ப்பிருக்கிறது!" எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
தவிர, அதற்கான சில சிம்டம்ஸ்களும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடம் தென்படுகின்றன. பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியதை வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுப் பேசினார். ``பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.க முறித்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க தனித்துப்போட்டியிட்டால் அதன் வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும். அதேவேளையில் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க இணைந்து பயணித்தால் அதன் வாக்குவங்கி குறைந்துவிடும்" என அ.தி.மு.க மீதான கரிசனத்தைக் கொட்டினார். அதேபோல, சமீபத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனை, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுவும் தி.மு.க-வினரை யோசிக்கவைத்திருக்கிறது.
இனி சிறுபான்மையினர் ஓட்டும் எங்களுக்கே!
கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``தேசியக் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது, நாம் உடன்படாத விஷயங்களுக்கும் ஆதரவளிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். இனிமேல் அந்த நிலை நமக்கு இல்லை. மாநில மக்களின் நலன்தான் அ.தி.மு.க-வுக்கு முக்கியம். சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க-தான். தேர்தல் நேரத்தில் தி.மு.க-வினர் மக்களிடம் அழகாகப் பேசி ஏமாற்றுவதற்கு அனைத்துத் தந்திரங்களையும் முன்னெடுப்பார்கள்" என சிறுபான்மையினருக்கு ஆதரவாக அ.தி.மு.க-தான் இருக்கிறது என ஒரே போடாகப் போட்டார்.
அதேநாளில்தான், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பும் நடந்தது. ஏற்கெனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க கூட்டணியில் ஒரு சீட் கேட்டார் தமிமுன் அன்சாரி. அதை தி.மு.க கொடுக்காத நிலையிலும், `பா.ஜ.க-வை வீழ்த்த தி.மு.க-வுக்கு எங்களின் ஆதரவு’ என்று முழங்கினார். தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே, தமிமுன் அன்சாரியின் பழைய ஸ்நேகிதரான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிப்பதால், கூட்டணியில் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான். அதேசமயம், ஏற்கெனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுத்தான் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தி.மு.க மௌனம் காத்துவருவதால், பெரும்பாலான இஸ்லாமியர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இந்த விடுதலை விவகாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்திருக்கும் தமிமுன் அன்சாரி, தி.மு.க கூட்டணிக் கட்சி தலைவர்களான த.வா.க வேல்முருகன், வி.சி.க திருமாவளவன், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரையும் நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது அ.தி.மு.க கூட்டணிக்கான கிரீன் சிக்னல் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தவிர, ஏற்கெனவே டி.டி.வி.தினகரனுடன் கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியும் அ.தி.மு.க பக்கம் அணிமாற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
வழி தெரியாத வாழ்வுரிமைக் கட்சி:
இது ஒருபுறமிருக்க, தொடக்கம் முதலே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் எம்.எல்.ஏ., உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்ததால் தன்னை தி.மு.க-வினர் யாரும் மதிப்பதில்லை என்று வேதனை தெரிவித்துவருகிறாராம். பிற கூட்டணிக் கட்சிகள் சில வார்த்தைகள் சொல்லவே தயங்கும்போது, தி.மு.க-வுடன் ஒத்துவராத விவகாரங்களில் சரமாரியாக விமர்சனம் செய்துவருகிறார். ஈரோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆதரிக்கவில்லை. `தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறேனா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்’ என்கிற ரீதியாகவே பேசிவருகிறார் வேல்முருகன். இதைப் பயன்படுத்திக்கொண்டு வேல்முருகனுக்கு அ.தி.மு.க நூல் கொடுக்கலாம். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருக்குமாயின் அது சந்தேகம்தான்.
அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து எம்.பி-யான பச்சமுத்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.கவுடனான கூட்டணியை முறித்துகொண்டதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. அதேபோல, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் ம.நீ.ம-வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ம.நீ.ம தனிக்கூட்டணி அமைக்காது. ஆக, இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இரண்டுமே அ.தி.மு.க கூட்டணிப் பக்கம் சாயவே அதிக வாய்ப்பிருக்கிறது.
இது தவிர, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈ.ஆர்.ஈஸ்வரன் திமுக கூட்டணியில் இருப்பதால், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசுவே விருப்பப்பட்டாலும் தி.மு.க அவரைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது. அவருக்கிருக்கும் அடுத்த வாய்ப்பும் அ.தி.மு.க-தான்! அதேபோல, தே.மு.தி.க-வும் அதிமுக பக்கமே நிற்கும்!
இது போன்ற யூகங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளும் வலுவாக இருப்பதால், தி.மு.க கூடாரம் யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கான அறிகுறியாகத்தான் சமீபத்தில் நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின், ``வரும் நடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்தால், சம்பந்தப்பட்ட தொகுதியின் மாவட்டச் செயலாளர் பதவி பாரபட்சமின்றி பறிக்கப்படும்" என்ற பேச்சு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், `எதுவும் நடக்கலாம்!’
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news

0 கருத்துகள்